தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் இந்தியா மாநிலங்களில் சிறந்து விளங்கினாலும், இந்தியாவின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி போன்ற நிறுவனங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
Advertisment
இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,களில் சேர நாட்டின் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வில் தகுதி பெற்று, ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்விலும் தகுதி பெற வேண்டும். இந்த தேர்வில் பெறும் கட் ஆஃப் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
இந்தநிலையில், ஐ.ஐ.டி.,களில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாக கல்வியாளர் அஸ்வின் கவலை தெரிவிக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி.,களில் சுமார் 16,000 பொறியியல் இடங்கள் உள்ளன. இந்தியாவில் ஐ.ஐ.டி.,களில் சேருவதில் ராஜஸ்தான் (13.1%), உத்தரபிரதேசம் (12.8%), மகாராஷ்டிரா (10.5%) ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
அடுத்த இடங்களில் தமிழகத்திற்கு அருகாமை மாநிலங்களான தெலுங்கானா (9.9%) மற்றும் ஆந்திரபிரதேசம் (8.6%) உள்ளது. இதனையே தெலுங்கு பேசும் மாணவர்கள் என்று எடுத்துக் கொண்டால் 18.5% மாணவர்கள் ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை பெறுகின்றனர். மேலும், முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்கள் சுமார் 55% இடங்களை ஆக்கிரமிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த வரிசையில் 12 ஆவது இடத்தில் உள்ளது. 436 மாணவர்களுடன் 2.6% விகிதத்தில் உள்ளது. தமிழகத்தின் உயர் கல்வி சேர்க்கை விகிதம், அதாவது 12 ஆம் வகுப்பிற்கு உயர் கல்வி படிப்புகளில் சேர்க்கை விகிதம் 46.9% உடன் இந்திய அளவில் முதன்மையாக உள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு முன் உள்ளவை எல்லாம் யூனியன் பிரதேசங்கள் எனும்போதும், பெரிய மாநிலங்களில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது. ஆனால் ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை என்று வரும்போது, கல்வியறிவில் பின் தங்கிய பீகாரை விட பின் வரிசையில் உள்ளது. எனவே தமிழக மாணவர்கள் ஐ.ஐ.டி.,களில் சேர கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“