உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இ-மெயில் ஐ.டி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் பிற தகவல்தொடர்புகள் பெரும்பாலும் ஆன்லைனில் செய்யப்படுவதால் மாணவர்கள் வசதிக்காக பள்ளிகளிலேயே இ-மெயில் ஐ.டி உருவாக்கி தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-12 வகுப்பு வரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இ-மெயில் ஐ.டி உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்குத் தகுதி பெறுவார்கள் என்பதால், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக், தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை தகவல், பாடத்திட்டம், சுற்றறிக்கைகள், செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட பல விவரங்களை மின்னஞ்சல் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு தெரிவிக்கின்றன.
அதன்படி மாணவர்களுக்கு வசதிக்காக பள்ளிகளிலேயே இ-மெயில் ஐ.டி உருவாக்கி தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9-12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்கி தர வேண்டிய அவசியம். அதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிகளில் உள்ள கம்யூட்டர் லேப் பயன்படுத்தி டிசம்பர் 31க்குள் இ-மெயில் ஐ.டி உருவாக்கி தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கப்பட்ட பின்னர் அதன் முகவரிகளை எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். அதனுடன் மின்னஞ்சலை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“