Tamil Nadu 10th Passed Employment Registration: 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள், வேலைவாய்ப்பு பதிவினை, தாங்கள் படித்த பள்ளியிலேயே மேற்கொள்வற்கான நடவடிக்கைகளை, பள்ளிகல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையுடன் இணைந்து எடுத்துள்ளது.
10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் இந்த சான்றிதழை கொண்டு, அடுத்தபடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று, வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்வர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரேநேரத்தில் வேலைவாய்ப்பு மையத்தில் திரள்வதால், வேலைவாய்ப்பு பதிவு செய்வதில் மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது. மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உடன் இணைந்து பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளது.
நடப்பு (2019) ஆண்டில் , பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ், இன்று ( ஜூலை 10ம் தேதி) முதல் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலேயே, இன்று(10ம் தேதி) முதல் 24-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம்.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.