பொறியியல் படிப்பில் சேரும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் குறைந்த பட்ச மதிப்பெண் 35-லிருந்து 40-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேரும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள், கவுன்சிலிங்கிற்கு குறைந்தப் பட்சமாக 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.
இதனால் பின் தங்கிய கிராமப்புற மாணவர்களும் தங்களது பொறியியல் கனவை நனவாக்கிக் கொண்டனர். இந்நிலையில் தற்போது திடீரென இந்த மதிப்பெண் 40-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பி.சி, எம்.பி.சி, பி.சி முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 2019-2020-ம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான் இந்த மதிப்பெண் விதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வாண்டு பொறியியல் படிப்பில் சேரும் பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாகக் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.