இஞ்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இரண்டு சுற்றுகள் இருக்கை ஒதுக்கீடு முடிந்த நிலையில், 87 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, மாணவர்களிடையே இஞ்ஜினியரிங் படிப்பின் மீதான மோகம் குறைந்து வருவதையே காட்டுவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2019ம் ஆண்டிற்கான இஞ்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கவுன்சிலிங் நடவடிக்கைகள், தொழில்நுட்ப இயக்குனரகத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இஞ்ஜினியரிங் (இளநிலை) படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங், இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. இஞ்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் 87 சதவீத இடங்கள் பூர்த்தியாகாமல் உள்ளன.
மாணவர் சேர்க்கை குறித்து பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளின்படி, மொத்தமுள்ள 1.66 லட்சம் இடங்களில், 2 கட்ட கவுன்சிலிங்கின் முடிவில், அதாவது ஜூலை 18ம் தேதி நிலவரப்படி 21 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள 494 கல்லூரிகளில் 27 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீத அளவிற்கு இடங்கள் நிரம்பியுள்ளன.
எதிர்பார்ப்பு நிறைவேறுமா? : இஞ்ஜினியரிங் படிப்புகளில், இந்தாண்டு 36 சதவீதம் அதாவது 60 ஆயிரம் மாணவர்கள் சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்தாண்டு, 70 ஆயிரம் இஞ்ஜினியரிங் இடங்கள் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள அரசு இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் மொத்தமுள்ள 3,820 இடங்களில் 2,398 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதேபோன்று அரசு உதவிபெறும் இஞ்ஜினியரிங் கல்லூரிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள 2,163 இடங்களில் 2,016 இடங்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஞ்ஜினியரிங் கவுன்சிலிங், மாணவர் சேர்க்கை மற்றும் அதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, மாணவர்கள், https://tneaonline.in/ என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.