மருத்துவ கலந்தாய்வுக்கு முன் பொறியியல் கலந்தாய்வு; அட்டவணையை வெளியிட்டது AICTE

Engineering counselling before medical counselling AICTE release schedule: AICTE வெளியிட்ட அட்டவணையின்படி, BE, BTech படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்று கலந்தாய்வை, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பு முடிக்கப்பட வேண்டும்.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) 2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு தேதியை அறிவித்த ஒரு நாள் கழித்து வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் செவ்வாய்க்கிழமை அன்று பொறியியல் கல்லூரிகளுக்கான 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட கல்வி அட்டவணையை வெளியிட்டுள்ளது. AICTE வெளியிட்ட அட்டவணையின்படி, BE, BTech படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்று கலந்தாய்வை, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பு முடிக்கப்பட வேண்டும்.

மேலும், அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன் இரண்டாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிக்கப்பட வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் 20 வரை நடத்தலாம். முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க கடைசி தேதி அக்டோபர் 25 ஆகும்.

2021-22 ஆம் ஆண்டிற்கான AICTE இன் திருத்தப்பட்ட கல்வி அட்டவணை

* பல்கலைக்கழகத்தால் இணைப்பு வழங்கல் – ஆகஸ்ட் 10

* முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வை முடிக்க கடைசி தேதி – செப்டம்பர் 30

* தொழில்நுட்ப படிப்புகளின் தற்போதைய மாணவர்களுக்கு ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான கடைசி தேதி – அக்டோபர் 1

* இரண்டாவது சுற்று கலந்தாய்வு முடிக்க கடைசி தேதி – அக்டோபர் 10

* முதல் ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கடைசி தேதி – அக்டோபர் 20

* தொழில்நுட்ப படிப்புகளின் முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான கடைசி தேதி – அக்டோபர் 25

* இரண்டாம் ஆண்டில் (lateral entry) நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி – அக்டோபர் 30

வல்லுநர்களின் கூற்றுப்படி, செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், பொறியியல் கலந்தாய்வுக்கு முன் மருத்துவ கலந்தாய்வை நடத்துவது இந்த ஆண்டிலும் சாத்தியமில்லை. இதனால், மருத்துவ இடங்களைப் பெறுவதில் உறுதியாக இல்லாத மாணவர்கள் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த பின்னர் மருத்துவ கலந்தாய்வில் கலந்துக்கொண்டு இடங்கள் கிடைத்தவுடன் பொறியியல் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டிலுள்ள உயர் பொறியியல் கல்லூரிகளில் பல நூறு பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் பி.இ., பி.டெக் படிப்புகளை 276 மாணவர்கள் நிறுத்திவிட்டனர். இதில் கிண்டி பொறியியல் கல்லூரி, (சி.இ.ஜி) மற்றும் மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) போன்ற தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் பின்னர், மருத்துவம் மற்றும் பிற படிப்புகளில் சேருகின்றனர்.

இவ்வாறு பொறியியல் இடங்களை வீணாக்குவதைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு பொறியியல் கலந்தாய்வுக்கு முன்னர் மருத்துவ கலந்தாய்வை நடத்துவதே என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கூறினார்.

அதேநேரம், பொறியியல் கலந்தாய்வுக்கு முன்னர் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டால் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 முதல் 100 இடங்கள் காலியாக இருக்கும்.

மேலும், பொறியியல் படிப்புகளில் சேர்க்கை முடிந்ததும் காலியாக உள்ள அனைத்து இடங்களையும் நிரப்ப முடியாது. தற்போதைய அட்டவணை மாணவர்களின் விருப்பமில்லாமல் இருந்தாலும் ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பை தேர்வு செய்து வைத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாக உள்ளது.

இதற்கிடையில், ஐ.ஐ.டி, என்.ஐ.டி.களுக்கான சேர்க்கை பல சுற்றுகளில் நடத்தப்படுவதால் தனியார் பல்கலைக்கழங்களும் சிக்கலை எதிர்கொள்கின்றன. மாணவர்கள் மத்திய அரசால் நிதியளிக்கப்பட்ட ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற பின்னர் தனியார் பல்கலைக்கழங்களை விட்டு வெளியேறுகின்றனர்.

எனவே ஏ.ஐ.சி.டி.இ ஆல் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட 10% அதிகமான சேர்க்கைக்கு அனுமதியளிக்க வேண்டும். மேலும், JEE அட்வான்ஸ்டு தேர்வுகளை ரத்துசெய்வதும் ஒரு நல்ல யோசனையாகும், என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Engineering counselling before medical counselling aicte release schedule

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com