/indian-express-tamil/media/media_files/2025/09/16/featured-inage-copy-2-2025-09-16-13-12-22.jpg)
இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்கள்: பி.கே. திரேசியா, லீலம்மா ஜார்ஜ், மற்றும் ஏ. லலிதா. Photograph: (Image Credit: Shantha Mohan)
1944-ம் ஆண்டில், சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் (CEG) 3 பெண்கள் தடைகளை உடைத்து, இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்களாக வரலாறு படைத்தனர். அவர்களின் துணிச்சல், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் பெண்களுக்கு ஒரு புதிய பாதையை வகுத்தது.
துணிச்சலான தந்தைகள்
'ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு மனைவி இருப்பார்' என்று கூறுவது வழக்கம். ஆனால், 20-ம் நூற்றாண்டில் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த பொறியியல் துறைக்குள் நுழைந்த 3 பெண்களின் வாழ்க்கைக்குப் பின்னால், அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்த தந்தையர்கள் இருந்தனர்.
1930-களின் பிற்பகுதியிலும், 1940-களின் முற்பகுதியிலும், 3 இளம் பெண்கள் - அய்யலாசோமயாஜுலா லலிதா, பி.கே. தெரேசியா, மற்றும் லீலம்மா ஜார்ஜ் - சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் (சி.இ.ஜி) சேர்ந்து, 1944-ல் இந்தியாவின் முதல் பெண் பொறியியல் பட்டதாரிகளாக வரலாறு படைத்தனர். இந்த மூவருக்கும் தங்களின் முன்னோக்குச் சிந்தனை கொண்ட தந்தையர்கள் உறுதுணையாக இருந்தனர்.
தெரேசியா மற்றும் ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்த சிரியன் கிறிஸ்தவர்கள். லலிதா சென்னை தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். மூவரும் குடும்பம், போராட்டங்கள் மற்றும் வெற்றிகளைச் சமநிலைப்படுத்தி, அரசாங்கப் பணியில் குறிப்பிடத்தக்க வேலைகளைப் பெற்றனர். இருப்பினும், அவர்களின் முன்னோடிச் சாதனைகள் பொதுவெளியில் பேசப்படவில்லை. இவர்களில், லலிதா தனித்துவமாகத் தெரிகிறார். இளம் வயதிலேயே கணவரை இழந்த ஒரு தாயான அவர், சர்வதேச தளங்களில் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறையில் பெண்களின் கல்விக்கு ஆதரவளித்ததற்காக பரவலாக அங்கீகாரம் பெற்றார்.
சி.இ.ஜி. மற்றும் ஆதரவு
1930-கள் மற்றும் 1940-களின் பிற்பகுதியில், புகழ்பெற்ற பழமையான நிறுவனங்களில் ஒன்றான சி.இ.ஜி.-யில் சேர்க்கை, இன்றைய ஜே.இ.இ அடிப்படையிலான முறையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. மாணவர்கள் தங்கள் 12-ம் வகுப்புத் தேர்வுகளின் அடிப்படையில் சேர்க்கை பெற்றனர். லலிதாவின் தந்தை பாப்பு சுப்பா ராவ், சி.இ.ஜி.-யில் மின் பொறியியல் பேராசிரியராக இருந்தார். அந்தக் காலத்து விதவைகளுக்கு ஏற்பட்ட துயரங்கள், தனது திறமையான மகளுக்கு ஏற்படக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
தெரேசியாவின் தந்தையும் ஒரு தொழில்நுட்பக் கல்வி பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், கேரளாவில் இருந்த ஒரே ஒரு பொறியியல் கல்லூரியிலும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அவர் தெரேசியாவை சென்னைக்கு அனுப்பினார்.
ஜார்ஜின் தந்தை, தொடக்கத்தில் தனது மகள் மேற்கத்திய மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினார். 1886-ல் ஆனந்திபாய் கோபாலராவ் ஜோஷி மற்றும் கடம்பிணி கங்குலி ஆகியோர் அமெரிக்காவில் மருத்துவம் பயின்றிருந்தனர். ஆனால், ஜார்ஜ் 1938-ல் லுதியானாவில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, உடல் கூறுகளைப் பிரிப்பது கடினமாக இருந்ததால், படிப்பிலிருந்து விலகி வீட்டிற்குத் திரும்பினார். எனினும், அவரது தந்தை லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் அவருக்கு அனுமதி பெற்றுத் தந்தார். அங்கேயும், ஜார்ஜ் கடினமான பாடத்திட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். இதன் காரணமாக, அவரது தந்தை சி.இ.ஜி. முதல்வரை அணுகி, பொறியியல் படிப்புக்கு இடம் கேட்டார்.
அப்போதைய கல்லூரி முதல்வர் டாக்டர் கே.சி. சாக்கோ பெண்களின் கல்விக்கு ஆதரவளித்தவர். உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல்களைப் பெற்ற பிறகு, முதல் குழு ஆண்கள் பட்டம் பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சி.இ.ஜி.யின் வாயில்கள் பெண் மாணவர்களுக்குத் திறக்கப்பட்டன. லலிதா நான்கு வருட மின் பொறியியல் படிப்புக்கும், ஜார்ஜ் மற்றும் தெரேசியா 1940-ல் சிவில் பொறியியலுக்கும் சேர்க்கை பெற்றனர்.
அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை
இருப்பினும், அவர்களுக்கு மற்றொரு தடை இருந்தது. ஹாஸ்டல் வசதிகள் மற்றும் தனி கழிப்பறைகள் இல்லை. உள்ளூர் என்பதால், லலிதா தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். ஜார்ஜ் மற்றும் தெரேசியா சின்னமலை அருகே உள்ள ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தனர்.
சேர்ந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, லலிதா மற்றும் ஜார்ஜ் இருவரும் ‘பொறியியலில் பெண்கள்’ (Eves in Engineering) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினர். அதில் அவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைக் குறிப்பிட்டனர். "முதல்வர் டாக்டர் சாக்கோவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவரது தைரியம் இல்லை என்றால், இந்த பழமைவாத உலகில் நாங்கள் இங்கே இருந்திருக்க மாட்டோம். ஹாஸ்டலில் எங்களுக்காக ஒரு தனிப் பிரிவு அமைக்க அரசாங்கத்திற்கு அவர் கடிதம் எழுதியதற்கும் நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்." என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
“ஒரு கடினமான பாடத்திட்டம் உள்ள கல்லூரியில், பெண் மாணவர்களுக்கு இது மிக முக்கியமான தேவை. கட்டிடங்கள் கட்டப்பட சிறிது காலம் ஆகும் என்றாலும், ஒரு சிறிய பகுதியை எங்களுக்காகத் தனிமைப்படுத்தி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த முடியுமா?” என்றும் அவர்கள் கோரினர்.
அந்தக் கட்டுரை, தொழில்நுட்பக் கல்வியில் பெண்களுக்கு சரியான இடம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது: “பொறியியல் துறையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சரியான மற்றும் மரியாதையான இடம் வழங்கப்படும்போது மட்டுமே, நாடு நிலையான தேசிய புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு நோக்கி ஒன்றிணைந்து பயணிக்க முடியும்.”
பட்டமும், பயணமும்
பொறியியல் படிப்பு 4 ஆண்டுகள் கொண்டது. ஆனால், இரண்டாம் உலகப் போர் காரணமாக, பொறியியலாளர்களின் அவசரத் தேவையைக் கருதி, படிப்பை மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தனர். ஜார்ஜ் தனது பட்டத்தை 1943-ல் சிறப்பான முறையில் முடித்தார்.
தெரேசியா மற்றும் ஜார்ஜ் இருவரும் தங்கள் மாநிலத்தில் பொறியியல் திட்டங்களுக்குத் தலைமை தாங்க கேரளாவுக்குத் திரும்பினர். லலிதா, கூடுதல் தேவைகளை முடித்த பிறகே தனது பட்டத்தைப் பெற்றார். நடைமுறைப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டதால், அவர் 1943-ல் தகுதித் தேர்வுகளை முடித்து, இந்தியாவின் முக்கிய பழுதுபார்க்கும் வசதிகளில் ஒன்றான ஜமால்பூர் ரயில்வே ஒர்க்ஷாப்பில் ஒரு வருட பயிற்சி பெற்றார்.
1944-ல், அவர் சிம்லாவில் உள்ள மத்திய தரநிலை அமைப்பில் (CSOI) பொறியியல் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அவர் தனது மகள் சியாமலாவைக் கருத்தில் கொண்டு பணிகளைத் தேர்ந்தெடுத்தார். தனது சகோதரர் குடும்பத்தின் ஆதரவுடன் அவர் மகளை வளர்த்தார். பின்னர், லண்டனில் உள்ள மின் பொறியாளர்கள் நிறுவனம் (Institution of Electrical Engineers (ஐ.இ.இ) தேர்வில் பட்டம் பெற்றார்.
இருப்பினும், தனது தந்தையின் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக லலிதா வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஒரு திறமையான கல்வியாளரும், கண்டுபிடிப்பாளருமான பாப்பு சுப்பா ராவ், மின்சார இசைக்கருவி, புகை இல்லாத அடுப்புகள் மற்றும் மின்சார தீப்பிழம்பு தயாரிக்கும் கருவி உட்படப் பல காப்புரிமைகளைப் பெற்றிருந்தார்.
1948-ல், நிதி நெருக்கடி காரணமாக லலிதா கொல்கத்தாவில் உள்ள அசோசியேட்டட் எலக்ட்ரிகல் இண்டஸ்ட்ரீஸ் (AEI) நிறுவனத்தில் சேர்ந்தார். அவரது இரண்டாவது சகோதரர் குடும்பம் ஏற்கனவே அந்த நகரத்தில் இருந்ததால், அவர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். ஏ.இ.ஐ-ல், அவர் விற்பனைப் பிரிவின் பொறியியல் துறையில் ஒரு வடிவமைப்புப் பொறியாளராகப் பணிபுரிந்தார். அங்கு அவர் மின்சாரக் கடத்தி அமைப்புகளில் கவனம் செலுத்தினார். அவரது மிகவும் அங்கீகாரம் பெற்ற திட்டங்களில் ஒன்று, அப்போது இந்தியாவின் மிகப்பெரிய அணையாக இருந்த பக்ரா நங்கல் அணைக்கான மின்சார ஜெனரேட்டர்களுக்கு அவர் அளித்த பங்களிப்பாகும்.
அவரது தொழில்முறை சாதனைகள் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டன. 1953-ல், லண்டனில் உள்ள மின் பொறியாளர்கள் குழு (Institution of Electrical Engineers) (CIEE) கவுன்சில் அவரை ஒரு இணை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது. 1966-க்குள், அவர் ஒரு முழு உறுப்பினராக உயர்ந்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/16/ceg-certificate-2-2025-09-16-13-15-34.jpg)
சர்வதேச தளங்களில் லலிதா
1964 ஜூன் மாதம், நியூயார்க்கில் நடைபெற்ற முதல் சர்வதேச மகளிர் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மாநாட்டிற்கு (WES) லலிதா அழைக்கப்பட்டார். அப்போது இந்தியாவில் இந்த அமைப்பிற்கு ஒரு தேசிய பிரிவு இல்லாததால், லலிதா தனிப்பட்ட முறையில் மாநாட்டில் பங்கேற்றார்.
அங்கிருந்த கூட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறையில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. லலிதாவின் வருகை, அறிவியல் மற்றும் பொறியியலில் பெண்கள் தொடர்பான சர்வதேச விவாதத்தில் இந்தியாவின் நுழைவை உணர்த்தியது.
1965-ல், லலிதா லண்டனில் உள்ள WES-ல் முழு உறுப்பினரானார். 1967 ஜூலையில் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகச் சேவை செய்ய ஒப்புக்கொண்டார். அவர் இந்தியாவில் இந்த நிகழ்வை தீவிரமாக விளம்பரம் செய்தார். அவரது முயற்சிகளால், ஐந்து இந்தியப் பெண் பொறியாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க முடிந்தது.
அறிவியல், விளையாட்டு மற்றும் இசையில் ஆர்வம்
லலிதாவின் தொழில்முறை சாதனைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், ‘வேர்களும் சிறகுகளும்’ (Roots and Wings) (2017) புத்தகம், ஒரு தாயாகவும், வழிகாட்டியாகவும் அவரது பங்களிப்பை எடுத்துரைக்கிறது. லலிதா தனது மகள் சியாமலாவை அறிவியல் படிக்கவும், டென்னிஸ் மற்றும் நீச்சல் போன்ற கலைகளில் ஈடுபடவும் ஊக்குவித்தார் என்று ஆசிரியர் சாந்தா மோகன் குறிப்பிடுகிறார். "அவரது தாயிடமிருந்து கிடைத்த வலுவான ஆதரவு காரணமாக, தனது தந்தை இல்லாததை ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று சியாமலா கூறுகிறார்," என்று மோகன் எழுதுகிறார்.
சியாமலா, லலிதா ஒரு சிக்கலான ஆளுமை கொண்டவர் என்று மேலும் குறிப்பிட்டார்: "ஆம், அவள் உறுதியானவள். ஆனால் கணவரை இழந்ததால், அவள் ஒரு ஒழுக்கமானவராகவும், கவனிப்பவராகவும் இரட்டைப் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. பொறியியல் தொழில் அவருக்கு ஓய்வெடுக்கச் சிறிதும் நேரத்தை வழங்கவில்லை. ஆனால், அவளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கர்நாடக இசையைக் கேட்பார். அவரது குழந்தைப்பருவம் மற்றும் இளமைப் பருவத்தில், அவர் புல்லாங்குழல் வாசிப்பார். இசை மீதான இந்த அன்பு அவரிடம் வாழ்நாள் முழுவதும் இருந்தது. நான் டென்னிஸ் விளையாடத் தொடங்கியபோது எனக்கு அவர் அளித்த இடைவிடாத உற்சாகத்திலிருந்து விளையாட்டு மீதான அவரது ஆர்வம் வெளிப்பட்டது. மிக முக்கியமாக, நான் ஒரு குழப்பத்தில் இருக்கும்போதெல்லாம், அவர் எப்போதும் சூழ்நிலையின் சாதக பாதகங்களை எடுத்துரைப்பார் - அது எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு அளவிட முடியாத அளவிற்கு உதவியது."
சியாமலா அறிவியல் மற்றும் கல்வியில் பட்டம் பெற்றார். ஒரு விஞ்ஞானியை மணந்து, விஞ்ஞானிகளாக மாறிய குழந்தைகளை வளர்த்தார். 2017-ல் ஆசிரியர் அவரிடம் பேசியபோது, 79 வயதான சியாமலா அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் கணிதம் கற்பித்துக்கொண்டிருந்தார் - இது லலிதாவின் வழிகாட்டுதல் மற்றும் உந்துதலின் நீடித்த தாக்கத்திற்கு ஒரு சான்றாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.