தஞ்சாவூர் வல்லம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தஞ்சாவூர் வல்லம் கொட்டாரத் தெருவில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்தில் பட்டய படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றுள்ளேன்.
ஆனால் ஆங்கில மருத்துவர்களின் தூண்டுதலால் போலீசார் சித்த மருத்துவ கிளினிக்கை நடத்த விடாமல் அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே, மருத்துவ கிளினிக் நடத்துவதில் தலையிடக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், சித்த மருத்துவ பட்டய படிப்பு 2007-08 கல்வி ஆண்டில் மட்டுமே நடத்தப்பட்டது. 744 மாணவர்கள் பயின்ற நிலையில், 576 பேர் மட்டுமே மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டய நிறைவு சான்றிதழை பெற்றுச் சென்றுள்ளனர்.
அந்தச் சான்றிதழில் ‘இந்த பட்டய படிப்பு சித்த மருத்துவ பயிற்சிக்கானது அல்ல’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008-ல் பட்டய படிப்பு நிறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: “தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ பட்டய படிப்பை முடித்து 576 மாணவர்கள் சான்றிதழை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சான்றிதழில் ‘இது பயிற்சிக்கானது அல்ல’ என குறிப்பிடப்பட்டு மாணவர்களிடம் உறுதிமொழி பெற்றிருந்தாலும், சான்றிதழ் பெற்றிருக்கும் மாணவர்கள் அதனை பின்பற்றுகிறார்களா? என்பது தெரியாது. அவர்களில் யாரேனும் இந்த சான்றிதழை பயன்படுத்தி சித்த மருத்துவர்களாக பயிற்சி செய்து வந்தால், அது நிச்சயம் சமூகத்திற்கு அழிவையே தரும்.
எனவே, தமிழக சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் உடன் இணைந்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2007-08 கல்வி ஆண்டில் ஓராண்டு சித்த மருத்துவப் பட்டய படிப்பை முடித்தவர்கள், அச்சான்றிதழை கொண்டு சித்த மருத்துவராக பயிற்சி செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஜனவரி 27ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கை ஏற்க முடியாது. மனுதாரர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“