தேனியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்ட திருநங்கை ஷிவின் பழனிவேல், தற்போது சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் (BCom CS) படிப்பில் முழு உதவித்தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளார். ஜூன் 2025 நிலவரப்படி, எத்திராஜ் கல்லூரியில் சேர்க்கப்பட்ட முதல் திருநங்கை மாணவி என்ற பெருமையையும் ஷிவின் பெற்றுள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று கல்லூரியில் சேர்ந்த ஷிவின், "இந்த தருணம் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 2022-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பை முடித்த ஷிவினின் கல்லூரி பயணம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவர் எதிர்பார்த்ததை விட சுமூகமாக மாறியதாக கூறப்படுகிறது.
விண்ணப்ப படிவத்தில் பாலின தேர்வில் 'மற்றவை' (others) என்பதை தேர்வு செய்த ஷிவினுக்கு, அடுத்த சில நாட்களில் கல்லூரி தலைவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதன் மூலம் கல்லூரியில் அவருக்கான இடம் உறுதியானது.
தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷிவின், "2022-ல் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூருக்குச் சென்றேன். பின்னர், 2023-ல் சென்னைக்கு வந்து, எனக்கு 'அம்மா' என்று அன்புடன் அழைக்கப்படும் ஷாக்ஷியைச் சந்தித்தேன். திருநங்கை சமூகத்தில் ஷாக்ஷி ஒரு தாயாகவே மதிக்கப்படுகிறார்," என்று கூறினார். பெற்றோரை இழந்த ஷிவினுக்கு, அவரது உடன்பிறப்புகளுடன் நல்லுறவு இருப்பதாகவும், அவரை மேலும் படிக்க ஊக்குவிப்பதாகவும் ஷாக்ஷி குறிப்பிட்டார்.
"எனது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருந்தேன். ஆனால் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து, சில கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன். அங்கே எனக்கு நிராகரிப்புகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், எத்திராஜ் கல்லூரியில் கிடைத்த வாய்ப்பு, என்னை மேலும் படிக்கவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு வேலையை பெறவும் ஊக்கமளித்துள்ளது" என்று ஷிவின் தெரிவித்தார்.
ஷிவினுக்கு அட்மிஷன் கொடுத்தது, கல்லூரியில் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கும் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கை என்று எத்திராஜ் கல்லூரி தலைவர் மைக் முரளிதரன் வலியுறுத்தினார். "எனக்குத் தெரிந்தவரை, பல கல்லூரிகள் இன்னும் திருநங்கை மாணவர்களை சேர்க்கவில்லை. அதனால்தான், நாங்கள் ஷிவினைச் சேர்க்க முடிவு செய்தோம். இவர் நிச்சயம் திருநங்கை சமூகத்தை சேர்ந்த மற்றவர்கள் கல்லூரிப் படிப்பைத் தொடர ஊக்குவிப்பார்" என்று முரளிதரன் கூறினார்.