10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என்று தமிழ் நாடு அரசு அறிவித்து இருப்பதாக குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இந்நிலையில், “இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என தி.மு.க அரசின் கல்வித்துறை அறித்துள்ளது. மேலும் சிறுபான்மை மொழிகளில் தேர்வை எழுதிக்கொள்ளவும் அனுமதி. தமிழையே தேவையில்லை என்று ஒதுக்கியதன் மூலம் உங்களின் போலி தமிழ்ப் பற்று வெளிப்பட்டுவிட்டது முதல்வரே.! இதுவா நீங்கள் தமிழ்? வளர்க்கும் லட்சணம்” என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த தகவலின் உண்மைத் தேனம்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் ஆய்வு செய்துள்ளது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, கடந்த மார்ச் 13 ஆம் தேதி இது தொடர்பாக ஏ.பி.பி நாடு இணைய பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “10ஆம் வகுப்பில் தமிழ் மொழி அல்லாத, சிறுபான்மை மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், 2023-2024ஆம் ஆண்டிற்கு மட்டும் தமிழ் மொழிப்பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற முடிந்து கடந்த மே மாதம் அதன் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 2024-25ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வில் மாற்றம் ஏதும் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி இது தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “தமிழ்நாட்டில் கட்டாய தமிழ் கற்றல் சட்டம் 2006ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும். இந்த கட்டாய தமிழ் கற்றல் சட்டம் 2015-2016 முதல் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2024-25ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வினை எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இத்திட்டம் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு சிறுபான்மையினர் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் என்பது இல்லாமல் விருப்பப் பாடமாக எழுத அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் லதா, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து தேர்வர்களும் பகுதி ஒன்றில் தமிழ் மாெழியை மட்டுமே மொழிப்பாடமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில், நியூஸ்மீட்டர் தேடலின் முடிவில், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என்று தி.மு.க அரசு அறிவித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும், மொழி சிறுபான்மையினருக்கு என இத்தகைய அறிவிப்பை 2024-25 ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் தி.மு.க அரசு வெளியிட்டிருந்தது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/truth-behind-tamil-not-compulsory-for-10th-exam-in-tamil-nadu-740886
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.