பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), தேசிய அங்கீகாரம் மற்றும் ஆய்வுக் கவுன்சில் (என்ஏஏசி) ஆகிய உயர் அமைப்புகளில், உயர் பதவிகளை வகித்து வரும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கே பெரும்பாலும் இந்திய பல்கலைக்கழகங்களால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருவது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மேற்கொண்ட புலனாய்வு மூலம் தெரியவந்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒருவருட கால ஆய்வுக்கு பிறகு, தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரையும் அத்தகைய பட்டங்களை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் நடத்தை நெறியை யுஜிசி கொண்டு வந்துள்ளது.
பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் NAAC என்பது உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிடுவதற்கும் அங்கீகாரம் செய்வதற்கும் யுஜிசியால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். யுஜிசி புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த நெறிமுறையை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாயன்று NAACன் செயற்குழுவால்(EC) அங்கீகரிக்கப்பட்ட புதிய நடத்தை விதியை கவுன்சிலின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதன் எடுத்துக்காட்டாக இருந்து வழிநடத்தவும், நெறிமுறைகள் மற்றும் நடத்தை நெறிமுறைகளை ஆதரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய என்ஏஏசி இயக்குனர் எஸ் சி சர்மா, "யுஜிசி துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையிலான குழு இந்த நெறிமுறையை உருவாக்கியது. செயற்குழு இதற்கு முழுவதுமாக ஒப்புதல் அளித்துள்ளது, அது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இது NAAC இன் ஒவ்வொரு பணியாளரையும் உள்ளடக்கியது. நாங்கள் அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்த நெறிமுறையை அனுப்புகிறோம்" என்றார்.
பட்வர்தன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "யுஏஜிசியிலும் என்ஏஏசிக்காக தயாரிக்கப்பட்ட நெறிமுறையை நாங்கள் செயல்படுத்த உள்ளோம். பல்வேறு துறைகளில் உயர் கல்வி தொடர்பான பிற அதிகாரிகள் இந்த நெறிமுறையை செயல்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்." என்றார்.
மேலும், மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் அதிகாரிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நிறுவனங்களிலிருந்து எந்த ஒரு கெளரவ பட்டத்தையும் ஏற்கவில்லை என்ற மற்றொரு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த புதிய நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NAAC இன் 15 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவுக்கு முன்னாள் யுஜிசி துணைத் தலைவர் வி எஸ் சவுகான் தலைமை வகிக்கிறார். மேலும், மத்திய உயர்கல்வி செயலாளர் ஆர் சுப்பிரமண்யமும் இதில் அங்கம் வகிக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1720-300x217.jpg)
முன்னதாக, 1997-2017 வரையிலான 20 ஆண்டுகளில் யார், யாருக்கெல்லாம் இந்திய அரசு பல்கலைக்கழகங்களால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துகொள்ள முயற்சித்தது. இதுதொடர்பான பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை 470 பல்கலைக்கழகங்களிடம் ஆர்டிஐ மூலம் கோரியது. அந்த 20 ஆண்டுகளில் 160 பல்கலைக்கழகங்கள் 1,400 பேருக்கு 2,000 கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளது. 126 பல்கலைக்கழகங்கள் யாருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கவில்லை. 184 பல்கலைக்கழகங்கள் எந்தவித பதிலையும் தெரிவிக்கவில்லை.
மேலும், இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த புலனாய்வு மூலம், இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர்களான பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி ஆகியோரும், மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் பதவிகளை வகித்தபோதுதான், அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அதேபோல், இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான கோவர்த்தன் மேத்தா தேசிய அங்கீகாரம் மற்றும் ஆய்வுக் கவுன்சிலின் (என்ஏஏசி) நிர்வாக குழு தலைவராக 2006-2012 காலகட்டத்தில் இருந்தார். அந்த 6 ஆண்டு காலகட்டத்தில், கோவர்த்தன் கர்நாடகா முதல் காஷ்மீர் வரை உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 18 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றது இந்த புலனாய்வு மூலம் அம்பலமாகியுள்ளது.
அதேபோல், பொருளாதார அறிஞர் சுக்டோ தோரட் யுஜிசி தலைவராக இருந்த சமயத்தில், 2006-2011 வரையில் 7 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றிருக்கிறார்.
மேலும், யுஜிசி தலைவராக இருந்த 1999-2002 வரையில் ஹரி கௌதம் என்பவர் 4 கௌரவ டாக்டர் பட்டங்களும், 2002-2005 வரை தலைவராக இருந்த அருண் நிகாவேகர் இரண்டு கௌரவ டாக்டர் பட்டங்களையும், 2013-2017 காலகட்டத்தில் வேத் பிரகாஷ் என்பவர் 3 கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றது ஆர்டிஐ மூலம் நிரூபணமாகியது குறிப்பிடத்தக்கது.