Chegg.org குளோபல் ஸ்டூடண்ட் பரிசு 2023க்கான முதல் 50 தரவரிசையில் உள்ள மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர், அதில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் அடங்குவர். இந்த 50 மாணவர்களும் 122 நாடுகளில் 3,851 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கற்றல், சக மாணவர்களின் வாழ்க்கை மற்றும் அதற்கு அப்பால் உள்ள சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தலைசிறந்த மாணவருக்கு வருடாந்திர விருது வழங்கப்படுகிறது. விருது பரிசு $100,000 ஆகும்.
இதையும் படியுங்கள்: ஐ.ஐ.டி மெட்ராஸின் கலப்பு மருத்துவ படிப்பு; 30 இடங்களுக்கு 6000 பேர் போட்டி
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள்: வினிஷா உமாசங்கர், தமிழ்நாடு, திருவண்ணாமலை, எஸ்.கே.பி.வனிதா இண்டர்நேஷனல் பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவி; நம்யா ஜோஷி, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சட் பால் மிட்டல் பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி; கிளாட்சன் வகேலா, குஜராத் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்க மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர், காந்திநகர், குஜராத்; ரவீந்திர பிஷ்னோய், சண்டிகர் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப மாணவர் மற்றும் ராஜஸ்தான் கோட்டாவில் உள்ள சர் பதம்பட் சிங்கானியா பள்ளியில் கணினி அறிவியல் படிக்கும் மாணவர் பத்மக்ஷ் கண்டேல்வால்.
Chegg.org இன் தலைவரும், Chegg இன் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியுமான ஹூதர் ஹட்லோ போர்ட்டர், "Chegg உங்களின் சாதனைகளை மட்டுமல்ல, இளம் மனங்கள் மாற்றத்திற்கான ஆர்வத்தால் உந்தப்படும் போது இருக்கும் முடிவற்ற சாத்தியங்களையும் கொண்டாடுகிறது,” என்று கூறினார்.
வினிஷா உமாசங்கர் ஒரு கலைஞர், கண்டுபிடிப்பாளர், TEDx பேச்சாளர், டயானா விருது பெற்றவர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். பள்ளியில் அவருக்கு பிடித்த பாடங்கள் கணிதம் மற்றும் அறிவியல். அவர் முதன்மையாக பூமியைப் பாதுகாக்கும் மற்றும் பின் தங்கிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் புதுமைகளில் கவனம் செலுத்துகிறார். அவரது 12 வயதில் அவரது புதுமைப் பயணம் தொடங்கியது. அவரது கண்டுபிடிப்புகளில் விருது பெற்ற ‘சோலார் அயர்னிங் கார்’ மற்றும் சக்தியைச் சேமிக்கும் ஸ்மார்ட் சீலிங் ஃபேன் ஆகியவை அடங்கும். இதற்காக தேசிய, சர்வதேச மற்றும் மாநில விருதுகளை வென்றுள்ளார்.
நம்யா ஜோஷி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார், டயானா விருது, குளோபல் சைல்ட் ப்ராடிஜி விருது, குளோபல் இன்னோவேஷன் விருது மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளார். அவர் ஒரு Minecraft வழிகாட்டி மற்றும் TEDx பேச்சாளர். Minecraft ஐ ஒரு கல்விக் கருவியாகவும் பயன்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார், அவர் Minecraft இல் பாடங்களின் மெய்நிகர் நூலகத்தை உருவாக்கியுள்ளார், அது அவரது YouTube சேனல் மற்றும் இணையதளத்தில் கிடைக்கிறது.
கிளாட்சன் வகேலா ஒரு மருத்துவ மாணவர், உடல்நலப் பாதுகாப்பு சமத்துவம் மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய வசதிக்காக வாதிடுபவர், பின்தங்கிய சமூகங்களில் சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களில் பங்கேற்கிறார். அவர் உலகளவில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகளாவிய மனநல சேவை வழங்குநர்களின் தரவுத்தளத்தை உருவாக்க உதவியுள்ளார் மற்றும் யுனிசெஃப் இந்தியாவில் யுவா (ஜெனரேஷன் அன்லிமிடெட்) க்கு இளைஞர் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
ரோபாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், டிசைன் மற்றும் பிற பொறியியல் துறைகளைப் பற்றி அறிய ரவீந்திர பிஷ்னோய் தனது சைபர் கஃபே வருகைகளைப் பயன்படுத்தினார், மேலும் கடந்த பத்தாண்டுகளில் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில், ரோபோக்கள், எக்ஸோஸ்கெலட்டன்கள், போர்ட்டபிள் வாட்டர் மற்றும் ஏர் ஃபில்டர்கள் உள்ளிட்ட பல சாதனங்களை உருவாக்கியுள்ளார். ரவீந்திர பிஷ்னோய் தனது சொந்த நிறுவனமான KieKie பிரைவேட் லிமிடெட்டை 2022ல் தொடங்கினார்.
பத்மக்ஷ் கண்டேல்வால் மாணவர்களின் தற்கொலை தடுப்பு மற்றும் வேட்டையாடுதல் எதிர்ப்பு ஆர்வலராக பணியாற்றுகிறார், அவர் NGO டைகர் வாட்ச் ஆதரவின் மூலம் குழந்தைகளுக்கான மோக்யா கல்வித் திட்டத்தின் தற்போதைய வீட்டுக்கல்வி மாதிரியைத் தொடங்கினார்.
வர்கி அறக்கட்டளையானது Chegg.org உடன் இணைந்து 2021 ஆம் ஆண்டில் வருடாந்திர உலகளாவிய மாணவர் பரிசை அதன் வருடாந்திர USD 1 மில்லியன் உலகளாவிய ஆசிரியர் பரிசுக்கான சகோதரி விருதாக அறிமுகப்படுத்தியது.
எல்லா இடங்களிலும் உள்ள அசாதாரண மாணவர்களின் முயற்சிகளுக்கு வெளிச்சம் தரும் புதிய தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். குறைந்தபட்சம் 16 வயது மற்றும் ஒரு கல்வி நிறுவனம் அல்லது பயிற்சி மற்றும் திறன் திட்டத்தில் சேர்ந்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த பரிசு திறக்கப்பட்டுள்ளது. பகுதி நேர மாணவர்கள் மற்றும் ஆன்லைன் படிப்புகளில் சேரும் மாணவர்களும் பரிசுக்கு தகுதியானவர்கள்.
"நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைய நேரம் முடிந்துவிட்டதால், கல்விக்கு முன்னுரிமை அளிப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது, எனவே எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்" என்று கேரளாவில் பிறந்த வர்கி அறக்கட்டளையின் நிறுவனர் சன்னி வர்கி கூறினார்.
இந்த ஆண்டுக்கான உலகளாவிய மாணவர் பரிசின் முதல் 10 இறுதிப் போட்டியாளர்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்கள்.
ஆண்டின் பிற்பகுதியில் அறிவிக்கப்படும் வெற்றியாளர், முக்கிய நபர்களைக் கொண்ட குளோபல் ஸ்டூடண்ட் பிரைஸ் அகாடமியால் முதல் 10 இறுதிப் போட்டியாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்.
(கூடுதல் தகவல்கள்: PTI)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.