வெளிநாட்டில் மருத்துவக் கல்வி முடித்துவிட்டு கொரோனா, போர் போன்ற எதிர்பாராத சிக்கல்களால் இன்டர்ன்ஷிப் முடிக்காதவர்கள் தாயகத்திலேயே அதைச் செய்யலாம் என தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்ட அறிக்கையில், "கொரோனா மற்றும் போர் காரணமாக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் இன்டர்ன்ஷிப் முடிக்காமல் தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
அத்தகைய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியாவிலேயே தங்களின் பயிற்சி மருத்துவ படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இது மாநில மருத்துவ கவுன்சில்களால் செயல்படுத்தப்படலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 இல் இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்ட பிறகு, தேசிய மருத்துவ ஆணையம் அதனை நிர்வகித்து வருகிறது.
கடந்தாண்டு நவம்பரில் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள், மருத்துவப் பட்டதாரிகள் தங்கள் முழுக் கல்வியையும், 12 மாத கால இன்டர்ன்ஷிப்பையும் அவர்கள் பாடத்தைத் தொடங்கிய அதே நிறுவனத்தில் முடிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது, உக்ரைனிலிருந்த வந்த மாணவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், படிப்பை இன்னும் முழுமையாக முடிக்காதவர்களுக்கு ஆணையம் அழைப்பு விடுக்கவில்லை.
இன்டர்ன்ஷிப்பை பொறுத்தவரை, கல்லூரிக்கு நேரில் சென்று மருத்துவம் பயின்ற எந்தவொரு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிக்கும், 12 மாதங்கள் அல்லது அவர்களின் இன்டர்ன்ஷிப்பில் மீதமுள்ள காலத்திற்கு பயிற்சி மருத்துவம் மேற்கொள்ள மாநில மருத்துவ கவுன்சில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதேபோல் மற்ற மருத்துவர்களுக்கு நிகராகவே ஸ்டைப்பெண்ட் எனப்படும் ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil