GATE 2023 registration starts today: Application, eligibility, exam date, number of papers, conducting IIT: பொறியியல், அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் நாட்டின் முன்னனி உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் வழிவகை செய்யும் கேட் தேர்வுக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது.
கேட் தேர்வு (GATE 2023): கான்பூர் ஐ.ஐ.டி 2023 ஆம் ஆண்டுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வை (கேட் தேர்வு) பிப்ரவரி 4, 5 11 மற்றும் 12, 2023 நடத்த உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு இன்று முதல் தொடங்குகிறது. GATE 2023 க்கான ஆன்லைன் விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும், ஆனால் விண்ணப்பதாரர்கள் தாமதக் கட்டணத்துடன் அக்டோபர் 7 வரை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்: பாக்ஸிங்-க்கு உதவ சாஃப்ட்வேர் உருவாக்கிய சென்னை ஐ.ஐ.டி; ஒலிம்பிக்கில் பதக்கத்தை அதிகரிக்க திட்டம்
இந்த கேட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3, 2023 முதல் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை https://gate.iitk.ac.in/ என்ற இணையதள பக்கத்தில் நிரப்ப வேண்டும். கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 23 புதிய தேர்வு நகரங்களைச் சேர்த்துள்ளது.
GATE 2023: முக்கியமான தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி – ஆகஸ்ட் 30, 2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி- செப்டம்பர் 30, 2022
தாமதக் கட்டணத்துடன் நீட்டிக்கப்பட்ட விண்ணப்பச் செயல்முறையின் இறுதித் தேதி- அக்டோபர் 7, 2022
விண்ணப்பங்களில் மாற்றங்களைச் செய்வதற்கான தேதிகள் – நவம்பர் 4, 2022 முதல் நவம்பர் 11, 2022 வரை
ஹால் டிக்கெட் வெளியீடு – ஜனவரி 3, 2023
கேட் தேர்வு 2023 நடைபெறும் தேதிகள் – பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12
விண்ணப்பதாரரின் பதில்கள் விண்ணப்ப போர்ட்டலில் கிடைக்கும் தேதி – பிப்ரவரி 15, 2023
விண்ணப்ப போர்ட்டலில் ஆன்சர் கீ வெளியிடப்படும் தேதி – பிப்ரவரி 21, 2023
விண்ணப்பதாரர்களால் ஆன்சர் கீ மீதான சவால்களை சமர்ப்பித்தலுக்கான தேதிகள் – பிப்ரவரி 22, 2023 முதல் பிப்ரவரி 25, 2023 வரை
கேட் தேர்வு ரிசல்ட் – மார்ச் 16, 2023
ஸ்கோர்-கார்டு வெளியீடு – மார்ச் 21, 2023
கேட் தேர்வு 2023- தகுதிக்கான அளவுகோல்கள்
ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தற்போது மூன்றாம் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் படிக்கும் விண்ணப்பதாரர் GATE 2023 க்கு விண்ணப்பிக்கலாம். அல்லது, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம் அல்லது கலை உள்ளிட்ட பிரிவுகளில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பட்டப்படிப்பை முடித்துள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தகுதி வரம்புகளை இங்கே பார்க்கலாம்:- https://gate.iitk.ac.in/eligibility_criteria.html
கேட் 2023- பாடங்கள்
GATE 2023 தேர்வு 29 தாள்களுக்கு நடத்தப்படும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு தாள் அல்லது இரண்டு தாள்கள் வரை தேர்வு செய்யலாம், இருப்பினும், வரையறுக்கப்பட்ட இரண்டு தாள் சேர்க்கை பட்டியலில் இருந்து இரண்டாவது தாளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பாடப் பட்டியல்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்: https://gate.iitk.ac.in/gate_syllabus.html
பாடத்திட்டத்தைப் பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பதாரர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத் தாளைக் கிளிக் செய்ய வேண்டும்.
கேட் 2023- பேப்பர் பேட்டர்ன்
வினாத்தாள் 100 மதிப்பெண்களுக்கு இருக்கும், ஒரு விண்ணப்பதாரர் இரண்டு தாள்களை எழுதினால் தலா 100 மதிப்பெண்கள் இருக்கும். தாளில் 15 மதிப்பெண்களுக்கு ஜெனரல் ஆப்டிட்யூட் (GA) இருக்கும், இது எல்லா தாள்களுக்கும் பொதுவானதாக இருக்கும். மேலும், அந்தந்த பாடத்திட்டத்தை உள்ளடக்கிய மீதமுள்ள தாளுக்கு 85 மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.
தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். மூன்று வகையான கேள்விகள் இருக்கும், அவை கொள்குறி வகை கேள்விகள் (MCQ), பல தேர்வு கேள்விகள் (MSQ) மற்றும் எண் பதில் வகை (NAT) கேள்விகள். மொத்தம் 65 கேள்விகள் (10 GA + 55 சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு) இருக்கும்.
MCQ களில் தவறான பதில்களுக்கு எதிர்மறை (மைனஸ்) மதிப்பெண்கள் இருக்கும். ஆனால் MSQ அல்லது NAT இல் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்காது.
விண்ணப்பதாரர்கள் விரிவான வினாத்தாள் வடிவத்தை இங்கே இருந்து பார்க்கலாம்:- http://gate.iitk.ac.in/question_pattern
முந்தைய ஆண்டு தாள்களைப் பார்க்க : https://gate.iitk.ac.in/download_info.html
கேட் மதிப்பெண் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
கேட் மதிப்பெண் அட்டை வழங்கப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். GATE தேர்வர்கள், முடிவுகளில் திருப்தி அடையவில்லை என்றால், அடுத்த ஆண்டு தேர்வு எழுதலாம்.
கேட் 2023 தேர்வு நடைபெறும் நகரங்கள்
விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மொத்தம் 8 மண்டலங்கள் உள்ளன. பல்வேறு கேள்விகள் மற்றும் பிற சிக்கல்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு இந்த மண்டலங்கள் உதவும். மண்டலங்கள்: ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர் (37 நகரங்கள்), ஐ.ஐ.டி பாம்பே (38 நகரங்கள்), ஐ.ஐ.டி டெல்லி (18 நகரங்கள்), ஐ.ஐ.டி குவஹாத்தி (22 நகரங்கள்), ஐ.ஐ.டி கான்பூர் (15 நகரங்கள்), ஐ.ஐ.டி காரக்பூர் (27 நகரங்கள்), ஐ.ஐ.டி மெட்ராஸ் (42 நகரங்கள்). ), ஐ.ஐ.டி ரூர்க்கி (20 நகரங்கள்).
ஒரு விண்ணப்பதாரர் மூன்று நகரங்களைத் தேர்வு செய்யலாம் ஆனால் அவை ஒரே மண்டலத்தில் இருக்க வேண்டும்.
GATE தேர்வு ஆனது பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், மலேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், சிங்கப்பூர் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் 8 சர்வதேச மையங்களையும் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர் நகரங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:- https://gate.iitk.ac.in/exam_cities.html
பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு
பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம் மற்றும் கலை ஆகிய துறைகளில் இருந்து இளங்கலை பாடங்களின் விரிவான அறிவை சோதிக்கும் தேசிய அளவிலான தேர்வாகும். இந்தத் தேர்வை ஏழு ஐ.ஐ.டி.,கள் மற்றும் ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர் சுழற்சி முறையில் நடத்துகின்றன. இது தேசிய ஒருங்கிணைப்பு வாரியம்- கேட், உயர்கல்வித் துறை, கல்வி அமைச்சகம் (MoE), இந்திய அரசு (GoI) சார்பில் நடத்தப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil