நாடு முழுவதும் இளங்கலை படிப்புகளில் பாலின இடைவெளியை குறைக்கும் முயற்சியில் தொற்றுநோய் ஆண்டில் பின்னடைவை சந்தித்தன. 2020-21 கல்வியாண்டில் பல்வேறு இளங்கலைப் படிப்புகளில் சேரும் ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வித் துறை அமைச்சம் வெளியிட்ட அகில இந்திய உயர்கல்வி பற்றிய ஆய்வு (AISHE)அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-இல் பி.காம் பாடத்தில் பாலின இடைவெளி குறைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு – ஆண் மாணவர்களைப் போலவே அதிகமான பெண்களும் இருந்தனர். 2020-2021க்கான AISHE அறிக்கையில், இது மாறுபட்டுள்ளது. கொரோனா தொற்றால் கல்வியில் இடையூறு ஏற்பட்டது. திருமணம் போன்ற காரணங்களால் இந்த விகிதம் குறைந்தது.
2019 ஆம் ஆண்டில் பி.காம் பாடத்தில் பதிவுசெய்யப்பட்டவர்களில் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் விகிதம் இருந்தனர். 2020 ஆம் ஆண்டில் பெண்களின் சேர்க்கை குறைந்தது. 100 ஆண்களுக்கு 94 பெண்களாக குறைந்தது. இது 2016 கணக்கீட்டிற்கு நிகராக இருந்தது, 2016-இல் 100 ஆண் மாணவர்களுக்கு 93 பெண்கள் என இருந்தனர்.
மாணவிகளின் விகிதம் மருத்துவம் உள்பட பிற இளங்கலை பாடங்களிலும் குறைந்தது. 2019-20 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 100 ஆண்களுக்கு 110 பெண்கள் இருந்தனர். 2020-21-ம் ஆண்டில் 100 பெண்கள் என குறைந்தது. இளங்கலை பார்மஸி படிப்பில் 2019-ம் ஆண்டு 93 பெண்கள், 100 ஆண்கள் என்ற விகிதத்தில் இருந்தனர். இது 2020-21ம் ஆண்டில் கடுமையாக சரிந்து 66 பெண்களாக குறைந்தது.
நர்சிங் மற்றும் ஆசிரியர் போன்ற இளங்கலைப் படிப்புகள், பாரம்பரியமாக அதிக பெண்கள் சேருவதை வழக்கமாக கொண்டிருந்தன. இருப்பினும் இதிலும் பெண்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது. 2019-20 இல் நர்சிங் 385 மற்றும் கல்வியில் 215 (ஒவ்வொரு 100 ஆண்களுக்கும்) இருந்து 2020-21-ம் ஆண்டில் முறையே 308 மற்றும் 185 பெண்களாக குறைந்தது.
கணினி அறிவியல், வணிக நிர்வாகம், மருந்தகம், தொழில்நுட்பம் மற்றும் சட்டம் போன்ற இளங்கலை படிப்புகளில் பாலின இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 2019 இல் 3.85 கோடியிலிருந்து 2020-21 இல் சுமார் 4.13 கோடியாக உயர்ந்துள்ளது, இது கிட்டத்தட்ட 29 லட்சம் அதிகரித்துள்ளது. மொத்தம் பதிவு செய்யப்பட்டவர்களில், 51.3% அல்லது 2.12 கோடி ஆண்கள் மற்றும் 48.7% பெண்கள்.
முதுகலை மட்டத்திலும், 2019-20 ஆம் ஆண்டை விட 2020-21 ஆம் ஆண்டில் வணிக நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வணிகத்தைத் தொடரும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
முதுகலை மட்டத்தில், 100 ஆண்களுக்கு பெண்களின் எண்ணிக்கையில் எம்.காம் படிப்பில் மட்டுமே உயர்ந்துள்ளது – 2019 இல் 186 பெண்களில் இருந்து 2020-21 இல் 198 ஆக உயர்ந்துள்ளது. முதுகலை மட்டத்தில் வணிக நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற படிப்புகள் ஆண்களே அதிகம் படிக்கின்றன.
AISHE நாடு முழுவதிலும் உள்ள 1,113 பல்கலைக்கழகங்கள், 43,796 கல்லூரிகள் மற்றும் 11,296 தனி நிறுவனங்களில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 70 ஆகவும், கல்லூரிகளின் எண்ணிக்கை 1,453 ஆகவும் அதிகரித்துள்ளது என ஆய்வு கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/