கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) மற்றும் மத்திய அரசு நிதியளிக்கும் தொழில்நுட்ப நிறுவனம் (சிஎஃப்டிஐ) ஆகியவற்றில் சேருவதற்கான தகுதி மதிப்பெண் இந்த ஆண்டு தளர்த்தப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜேஇஇ மெயின் 2020 தேர்வு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்போது பெறப்பட்ட மதிப்பெண்களைப் பொருட்படுத்தாமல் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.” என்று டிவீட் செய்துள்ளார்.
விதிமுறைப்படி, ஒரு மாணவர் தனது வகுப்பு 12 பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12ம் வகுப்பு முதல் 20 சதவீதம் தேர்ச்சிபெற்றவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்ணை பெற்றிருக்க வேண்டும். அதோடு ஜேஇஇ நுழைவுத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள்தான் என்.இ.டி மற்றும் சி.எஃப்.டி.ஐ நிறுவனங்களில் தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி / எஸ்டி மாணவர்கள் குறைந்தது 65 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதல் 20 சதவீத தேர்ச்சி மதிப்பெண்ணை பெற்றிருக்க வேண்டும் என்று இருந்தது.
ஆனால், கொரோனாவைரஸ் பரவல் சூழ்நிலையை கவனத்தில்கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜே.இ.இ. முதன்மை தேர்வு 2020-க்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்போது பெறப்பட்ட மதிப்பெண்களைப் பொருட்படுத்தாமல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான அளவுகோலை தளர்த்த முடிவு செய்திருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"