நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள சிபிஎஸ்இயின் பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை செய்ய பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், கல்வி அமைச்சகத்திலிருந்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அளித்த தகவல் படி புதிய தொற்று நோய்களின் அதிகரிப்பால் சரியான நேரத்தில் தேர்வுகளை நடத்துவது கடினம் என்று தெரிகிறது.
தேர்வுத் தேதிகளை மறுபரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் இப்போது தயாராக இருந்தாலும், மிக விரைவாக தேர்வு கால அட்டவணையில் மாற்றங்களை செய்து அறிவிப்பது கடினமானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சையிலிருப்போர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 11,08,087. தினசரி இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 839 இறப்புகள் பதிவாகியுள்ளன.
தேர்வுகளை தள்ளி வைக்கும் கோரிக்கைக்கு தற்போது எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. கொரோனா தொற்றுகளில் பெரிய மற்றும் கட்டுப்பாடற்ற உயர்வு இருப்பதால் மே மாதத்தில் நடைபெற உள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை மாற்றி வைப்பது குறித்து சிபிஎஸ்இ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய தலையிடுமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளனர். கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவது அவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் அச்சத்தை தரக் கூடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிவசேனா கட்சியும் கல்வி அமைச்சகத்திற்கு தனியாக கடிதம் எழுதியுள்ளது, தேசிய ஒருமித்த கருத்தை வளர்த்துக் கொள்ளவும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ மற்றும் பிற பள்ளி பொதுத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்யவும் அரசாங்கத்தை கோரியுள்ளது.
ஆனால், இந்த மாத தொடக்கத்தில் சிபிஎஸ்இ வாரியம், திட்டமிட்டப்படி தேர்வுகளை நடத்துவதாகவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தேர்வு மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil