தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் 14 லட்சம் பேர் எழுதினார்கள். சென்னையில் 316 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. கைப்பேசி, மின்னணுக் கருவி, பென்டிரைவ், அறிதிறன் கைக்கடிகாரம் போன்ற நவீன கருவிகளை எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சென்னையில் இன்று (சனிக்கிழமை) 94,845 பேர் தேர்வு எழுதினார்கள். 2 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து மொழித் திறனை அறிவதற்காக 100 கேள்விகளும், பொதுஅறிவுப் பிரிவில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான மொத்த மதிப்பெண்கள் 300. சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப் பணிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், வருவாய், ஆய்வாளர், வனகாவலர், வன பாதுகாவலர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு குரூப்-4 தேர்வு தீவிர கண்காணிப்புடன் நடந்தது. தேர்வு நடைபெறும் முதல் நாளே மையங்களை தேர்வர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். பதற்றமில்லாமல் தேர்வு எழுத வேண்டும். 9 மணிக்கு தேர்வு எழுதுவதற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தினாலும் தாமதமாகவே வருகிறார்கள். இதுதொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. 14 லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் அவர்களின் விடைத் தாள்கள் 2 வாரத்தில் திருத்தப்பட்டு 3 மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். குரூப்-1 தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளிவரும்.
குரூப்-4 தேர்வில் கேள்விகள் யாரும் பதிலளிக்க முடியாத மாறுபட்ட அளவில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. வினாத் தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகள் சில நேரங்கள் கேட்கப்படுவதால் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகிறது. கேள்விகளை தயாரிக்கும் குழுவில் உள்ளவர்கள் அதுபோன்ற கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை அவர்கள் எடுத்து வந்தால் அந்தக் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள். அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற மிகுந்த ஆசை, ஈடுபாடு இருக்கிறது.
வேலை பாதுகாப்பு அரசு பணியில் இருப்பதால் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 925 காலி பணியிடங்கள் இருந்தாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தேர்வு நடைபெறுவதால் காலியிடங்கள் இன்னும் அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை. குரூப் 4 தேர்வு வினாத்தாள், விடைத்தாள் அனைத்து பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. அதனால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.