தமிழகத்தில் கொரொனோ பரவல் காரணமாக இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.
அதன்படி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பி.இ.,பி.டெக்.,பி.ஆர்க்., ஆகிய படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆன்லைன் தேர்வு எந்த முறையில் நடைபெறும் என்ற குழப்பம் மாணவர்களிடையே இருந்து வந்தது. அதனை தீர்க்கும் வகையில், செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் தேர்வில் பங்கேற்கலாம். தேர்வு தொடங்கும் சமயத்தில் மாணவர்களின் வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல், கூகுள் மீட் போன்றவற்றின் மூலம் வினாத்தாள்கள் அனுப்ப வைக்கப்படும்.
3 மணி நேரம் நடைபெறும் செமஸ்டர் தேர்வுக்கான விடையை, மாணவர்கள் ஏ4 தாளில் எழுத வேண்டும். தேர்வு முடிந்த 1 மணி நேரத்திற்குள், விடைத்தாள்களை பிடிஎஃப் பார்மட்டில் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பாக, விடைத்தாள்களில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாடத்தின் பெயர் உள்ளிட்டவற்றை வினாத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும்
மேலும், மாணவர்கள் எழுதிய தேர்வுக்குரிய விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த 1 வார காலத்திற்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பத்தவறினால் விடைதாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாணவர்கள் மின்னஞ்சல், வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பிய விடைத்தாள்களும், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே விடைதாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.