நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இந்த 4 மாவட்டங்களுக்கு நாளை (18.12.2023) காலை 8.30 மணி வரை சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருவதால், கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“