திருச்சியில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நேற்று நடைபெற்ற ஒன்பதாம் வகுப்பு தமிழ் வினாத்தாள்கள் பற்றாக்குறையுடன் வந்தது. ஆகையால் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் வினாத்தாள்கள் பள்ளிக்கு மிகவும் காலதாமதமாகவே 9.30 மணிக்கு மேல் திருவெறும்பூர் தொகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு வந்ததால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்தப் பள்ளியில் இருந்து தான் திருவெறும்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்: தெற்கு ரயில்வேயின் 964 பணிகளில் 80% வட இந்தியர்கள் தேர்வு; அன்புமணி அதிர்ச்சி
இந்த நிலையில், 9.30 மணிக்கு மேல் அந்த பள்ளியில் இருந்து வினாத் தாள்களை எடுத்துக்கொண்டு பிற பள்ளிகளுக்கு எடுத்து சென்று எப்படி தேர்வு நடத்துவது என்று வினாத்தாள் எடுத்து செல்பவர்கள் புலம்பியதையும் காண முடிந்தது.
அதே நேரம் கொரோனா பரவல் சற்று அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில், கொரோனா போல் ஏற்படும் பேரிடர் காலத்தில் பள்ளி கல்வித்துறை முழு ஆண்டு பரீட்சையை ரத்து செய்யும் சூழலில் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கிட்டு தேர்ச்சி விகிதத்தை அறிவித்து வருகின்றது.
இப்படியான சூழலில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கேள்வித்தாள்கள் பள்ளிக்கு வெளியில் சென்று ஜெராக்ஸ் எடுக்கும் சூழலில் வினாத்தாள்கள் கசிய வாய்ப்பு உள்ளது. இதனால் சரியாகப் படிக்காத மாணவன் கூட முழு மதிப்பெண் பெரும் நிலை ஏற்படலாம். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் நன்றாக மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது இனிவரும் காலங்களில் இப்படியான தவறுகள் நிகழாது என தெரிவித்தனர். என்றாலும் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே இப்படியான அவல நிலை என்றால் தமிழகத்தில் மத்த மாவட்டங்களில் என்ன நடக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil