தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபீஞ்சல் புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளிலும் வெள்ளம் புகுந்து, சில இடங்களில் மாணவர்களின் புத்தகங்களும் மழை நீரில் நனைந்தன.
விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. விழுப்புரம், கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை பெய்தது.
இந்தநிலையில், அரையாண்டு தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 9ஆம் தேதி நடைபெறுகின்ற அரையாண்டு தேர்வு தேதியில் மாற்றம் இல்லை. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும்.
டிசம்பர் ஒன்பதாம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், தொடர்ந்து நீர் தேங்கியிருந்தால் ஜனவரி மாதம் நடத்தப்படும்.
அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம். நிலைமை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“