/tamil-ie/media/media_files/uploads/2023/08/TNPSC-Group-4.jpg)
குரூப் 4 தேர்வு விடைத் தாள் நகலை உடனடியாக வெளியிட வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் நகலை (ஓ.எம்.ஆர் தாள்) உடனடியாக வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வில் மோசடி நடந்துள்ளது, எனவே எங்களின் விடைத்தாள் நகலை வழங்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ”தமிழகத்தில் 7301 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு 2022 மார்ச் மாதம் வெளியானது. அந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். பின்னர் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. தேர்வில் எங்களுக்கு 255 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் நாங்கள் தேர்வு செய்யப்படவில்லை. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.
குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது. எனவே எங்களின் விடைத்தாள் ஓ.எம்.ஆர் சீட் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், எங்களுக்காக 2 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் வெளியிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். விடைத்தாள் வெளியிடப்படாவிட்டால் உடனடியாக வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.மேலும், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகின்ற 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.