சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை (18.11.2022) நடந்த இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான மூன்றாம் பருவ தமிழ் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் ஆண்டு வினாத்தாளுக்குப் பதிலாக வேறு வினாத்தாள் வழங்கப்பட்டதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: கூகுள் மேப் அப்டேட் செய்யப்படாததால் குரூப் 1 தேர்வு எழுத முடியாமல் தவித்த தேர்வர்கள்
இந்தநிலையில், வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த உயர் கல்வித்துறை குழு அமைத்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி ஆணையர் லட்சுமி பிரியா, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் மற்றும் செயலர் கிருஷ்ணசாமி, அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய குழு இந்த விசாரணையை நடத்தும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த குழு விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் வினாத்தாள் மாறியது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கு அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை தெரிவிக்க வேண்டும். இந்த தவறுக்கு காரணமான மற்றும் பொறுப்பு அதிகாரிகள், அலுவலர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என குழுவிற்கு உயர் கல்வித்துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
மேலும் இந்த குழுவின் விசாரணைக்கு தேவையான உரிய அலுவலக வசதிகளை சென்னை பல்கலைக்கழகம் செய்து தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வினாத்தாள் மாறிய விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil