தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடந்து வந்தது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடந்து வந்தது.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் முடிவு செய்தன.
இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், தேர்வுகள் ஆன்லைனிலேயே நடத்தப்படவேண்டும் என மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் நேற்று அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்து தேர்வாகவே நடைபெறும் என உறுதி பட தெரிவித்தது.
தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதில், பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
இதனிடையே, நேரடி தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. முன்னதாக அண்ணா பல்கலைக்கழகம் டிசம்பர் 13 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. தற்போது தேர்வுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil