மாநிலத்தின் உயர்கல்வி அமைப்பில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் எல். பாலகுருசாமி, தமிழக முதலமைச்சருக்கு முக்கியக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பாலகுருசாமி தனது கடிதத்தில், " தேசிய கல்விக் கொள்கை குறித்து சரியான புரிதல் இல்லாததாலும், மாநிலத்துக்கு உரிய கொள்கையை உருவாக்காததாலும், மாநில பல்கலைகள் குழப்பத்தில் உள்ளன. துணை வேந்தர்கள், பதிவாளர்கள், கணக்கு அலுவலர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், முடிவெடுப்பதில் தாமதமும், கற்பித்தலில் தரமின்மையும் உள்ளது.
அரசின் அதிகார தலையீடுகளால் பல்கலைகளும், உறுப்பு கல்லுாரிகளும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. நிதிப்பற்றாக்குறை, காலாவதியான பாடத்திட்டம், ஆய்வகங்கள், நுாலகங்கள், விடுதிகளில் வசதியில்லாமை உள்ளிட்ட காரணங்களால், கற்றலும் ஆய்வுப் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
அதனால், சுதந்திரமான ஆள்சேர்ப்பு, பாடத்திட்டம் உருவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு குழு அமைக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி, 'டிஜிட்டல்' உள்கட்டமைப்புகள் உருவாக்கி, சுயாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களாக பல்கலைகள் செயல்பட, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.