தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission-TNPSC) தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில் 2022-ம் ஆண்டு நடத்தப்பட இருக்கும் அரசு போட்டித் தேர்வுக்களுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதில், பிப்ரவரி மாதம் குரூப் - 2 தேர்வுக்கான அறிவிப்பும், மார்ச் மாதம் குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படாததால், இந்த அறிவிப்பு அரசு வேலை ஆர்வலர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலானோர் போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி வகுப்புக்கு செல்வது உண்டு. அதிகப்படியான பணத்தை செலவிட்டு வகுப்பு செல்வதற்கான வாய்ப்பு எல்லாருக்கும் இருக்காது. எனவே, ஏழை மாணவர்களும் பலன்பெறும் வகையில், ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்தி வந்தது.
தற்போது கொரோனா பரவலால் ஒரே இடத்தில் மாணவர்கள் கூடுவது சாத்தியமில்லாமல் ஆகியுள்ளது. தொற்று பரவும் அபாயம் இருப்பதால், ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் எல்லா மாவட்டங்களிலும், வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தின் சார்பாக நடத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
இதற்காக `Virtual Learning Portal' என்ற இணைய பக்கத்தை அரசு உருவாக்கியுள்ளது. இதில் போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான தகவல்கள், புத்தகங்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்குமான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- முதலில் https://tamilnaducareerservices.tn.gov.in/Registration/vle_candidate_register என்ற லிங்க்கிற்கு செல்ல வேண்டும்.
- பின்னர், அந்த பக்கத்தில் `பதிவு ' என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்தபடியாக உங்கள் பெயர், கல்வித்தகுதி, ஆதார் எண், ஊர், தொலைபேசி எண் போன்ற கேட்கப்படும் விவரங்களை பதிவிட்டு, ஐடியை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
- தொடர்ந்து, உங்கள் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு பதிவு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், இலவச ஆன்லைன் பயிற்சிக்கான வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுவில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள்.
- குறிப்பு: தினமும் ஆன்லைன் பயிற்சி வகுப்புக்கான லிங்க்குகள் அனுப்பி வைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் 12 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சி வகுப்புகளுடன் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படுவதால், மாணவர்களின் மிகுந்த உபயோகமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.