மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் , ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் 'யுக்தி' (YUKTI) <அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் இந்திய இளைஞர்கள் கோவிட் தொற்றை எதிர்கொள்ளுதல்> என்ற இணைய போர்ட்டலைத் துவக்கி வைத்தார். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சிகள் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் ஆவணப்படுத்தவும் உதவுகின்ற ஒரு பிரத்யேக போர்ட்டலாக மற்றும் டேஷ்போர்டாக இது இருக்கிறது. கோவிட்-19 உருவாக்கியுள்ள சவால்களின் பல்வேறு பரிமாணங்களையும், ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் அணுகுவதை இந்த போர்ட்டல் நோக்கமாக கொண்டுள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கு அதிகத் தரத்திலான கற்றல் சூழ்நிலையை தொடர்ச்சியாக வழங்குவதும் முக்கியமான ஒன்றாகும். இந்த சிரமமான காலகட்டத்தில் நமது குறிக்கோளை அடைவதற்கு, உதவியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்ட ஒரு முயற்சியாக இந்தப் போர்ட்டல் விளங்குகிறது என்று குறிபிட்டார்.
கல்வி நிறுவனங்கள், குறிப்பாக கோவிட் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கல்வி நிலையங்களின் பல்வேறு புத்தாக்க நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை இந்தப் போர்ட்டல் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. கல்வி நிலையங்கள் மேற்கொள்ளும் சமுதாய மேம்பாட்டு நடவடிக்கைகளும், மாணவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் இந்தப் போர்ட்டலில் முக்கியத்துவம் பெரும்.
எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள கோவிட்-19 சூழலின் காரணமாக உருவாகியுள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் கடைபிடிக்கப்படும் தங்களது செயல் உத்திகளையும் இதர எதிர்கால நடவடிக்கைகளையும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள இந்தப் போர்ட்டல் அனுமதிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மிகச் சிறப்பாகத் திட்டமிடுவதற்குத் தேவையான உள்ளீடுகளை இந்தப் போர்ட்டல் வழங்கும் என்றும், அடுத்த ஆறு மாதங்களில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது செயல்பாடுகளை திறம்பட கண்காணிப்பதற்கும் இந்தப் போர்ட்டல் உதவும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும், உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் இருவழி தொடர்பு சேனலையும் இந்த போர்டல் நிறுவும் என்று நிஷாங்க் கூறினார். இதனால், கல்வி நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை அமைச்சகம் முறையை வழங்க முடியும். மேலும், இந்த சவாலான காலங்களில் மாணவர்களின் வாழ்க்கை முறை, வேலைவாய்ப்பு தொடர்பான சவால்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு இந்த போர்டல் உதவும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.