பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டுத் திரை - பண்பாட்டு நிறுவனத்தில் (International Institute of Film and Culture) மூன்றாண்டு இளங்கலை திரைக்கல்விக்கான 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் நுழைய வேண்டும் என்பது பலரின் கனவு. அதில் கணிசமானோர் எப்படியாவது படம் இயக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பல்வேறு கதைகளுடன் முயற்சி செய்து வருவர். அதேநேரம் திரைப்படம் சார்ந்த அறிவைக் கற்றுக் கொள்ள பல்வேறு படிப்புகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், பிரபல இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டுத் திரை- பண்பாட்டு நிறுவனத்தில் மூன்றாண்டு இளங்கலை திரைக்கல்வி (B.Sc Film Studies) படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள ஐ.ஐ.எஃப்.சி நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த படிப்பை வழங்கி வருகிறது. இந்தப் படிப்பு 6 செமஸ்டர் என்ற அடிப்படையில் 3 ஆண்டு கால பட்டப்படிப்பாக கற்பிக்கப்படுகிறது.
இயக்குநர் வெற்றிமாறனின் ஐ.ஐ.எஃப்.சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான கல்வி தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இயக்குனராகும் கனவுகளோடு வரும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத எளிய மாணவர்களுக்கு 100 சதவீத உதவித் தொகையுடன் இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த இளங்கலை திரைக்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் https://iifcinstitute.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். மேலும் தகவல்களுக்கு 9363285306 என்ற தொலைப்பேசி எண்ணிற்கும் iifcinstituteofficial@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரிலும் தொடர்புகொள்ளலாம்.