Times Higher Education (THE) அமைப்பு வெளியிட்டுள்ள ஆசிய பல்கலைகழக தரவரிசை பட்டியலின் முதல் 100 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளபோதிலும், ஐஐடிகளின் நிலை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம், தேசிய அளவில் தொடர்ந்து முதலிடத்திலும், சர்வதேச அளவில் 36வது இடத்தையும் பிடித்துள்ளது. தரவரிசையின் முதல் 100 இடங்களில் 8 இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
2016ம் ஆண்டு முதல் இந்திய கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து திருப்திகரமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஐஐடிகளை பொறுத்தவரையில் அதன் வளர்ச்சியில் இறங்குமுகம் என்றே கூறவேண்டும். காரக்பூர் ஐஐடி மற்றும் டெல்லி ஐஐடி மட்டும், 2019ம் ஆண்டைப்பொறுத்தவரை சிறிது ஏற்றம் பெற்றுள்ளது. ரோபர் ஐஐடி, இந்தாண்டு முதன்முறையாக தரவரிசைப்பட்டியலில் இணைந்துள்ளது. மற்ற ஐஐடிகளின் நிலை இறங்குமுகமாகவே உள்ளது.
உள்நாட்டில் நிலவும் போட்டிகளினாலேயே, ஐஐடிகளின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2019ம் ஆண்டை காட்டிலும், ஆசிய நாடுகளில், தகுதி பெற்ற பல்கலைகழகங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், இந்திய ஐஐடிகளின் தரம் இறங்குவரிசையில் இருந்ததாலேயே, இந்த தரவரிசைப்பட்டியலில், இந்திய ஐஐடிகளினால் குறிப்பிடத்தக்க இடத்தை பெற இயலவில்லை என்று Times Higher Education (THE) அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பே ஐஐடி, டெல்லி ஐஐடி, காரக்பூர் ஐஐடி, சென்னை ஐஐடிகளில் 2019ம் ஆண்டை காட்டிலும் கற்பித்தல் திறன், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. இருந்தபோதிலும், 2019ம் ஆண்டை ஒப்பிடும்போது அதன் தரவரிசையில் இறங்குமுகமே ஏற்பட்டுள்ளது.
ரூர்கி ஐஐடி மற்றும் டெல்லி ஐஐடிக்களே, கடந்த ஆண்டைவிட ஏற்றம் பெற்றுள்ளது.
கல்வித்துறையில் சர்வதேசமயமாக்கலின் விளைவாக, பாம்பே ஐஐடி மற்றும் சென்னை ஐஐடிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Times Higher Education (THE) அமைப்பு வெளியிடும் இந்த தரவரிசை பட்டியலில் வெளிப்படைத்தன்மை இல்லை என பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்கள், 2019ம் ஆண்டில் இதில் பங்கேற்பதிலிருந்து விலகிக்கொண்டன. முன்னணி கல்வி நிறுவனங்களின் இந்த புறக்கணிப்பு நடவடிக்கையால் தீமையே விளையும் என்று Times Higher Education (THE) அமைப்பு கருத்து தெரிவித்திருந்தது.
இந்திய அளவில் தரவரிசை
பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் - 36வது இடம்
ரோபர் ஐஐடி - 47வது இடம்
இந்தூர் ஐஐடி - 55வது இடம்
காரக்பூர் ஐஐடி - 59வது இடம்
டெல்லி ஐஐடி - 65வது இடம்
பாம்பே ஐஐடி - 69வது இடம்
ரூர்கி ஐஐடி - 83வது இடம்
வேதியியில் தொழில்நுட்ப மையம் - 92வது இடம்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற 10 பல்கலைகழகங்கள்
சின்குவா பல்கலைகழகம் ,சீனா - முதலிடம்
பெகிங் பல்கலைகழகம் , சீனா - 2ம் இடம்
சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகம் - 3ம் இடம்
ஹாங்காங் பல்கலைகழகம் - 4ம் இடம்
சிங்கப்பூர் நங்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகம் - 5ம் இடம்
டோக்கியோ பல்கலைகழகம், ஜப்பான் - 7வது இடம்
சீன பல்கலைகழகம், ஹாங்காங் - 8வது இடம்
சியோல் தேசிய பல்கலைகழகம், தென்கொரியா - 9வது இடம்
10வது இடத்தில், சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம் மற்றும் தென்கொரியாவின் சுங்கியுன்குவான் பல்கலைகழகம் உள்ளது.
2019ம் ஆண்டை ஒப்பிடும்போது தரவரிசையில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 7 இடங்களை இழந்துள்ளபோதிலும், தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ரோபர் ஐஐடி இந்தாண்டில் தான் தரவரிசையில் நுழைந்துள்ளபோதிலும், முதல் 50 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, காரக்பூர் ஐஐடி 17 இடங்களும், டெல்லி ஐஐடி 24 இடங்களும் முன்னேறியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்திய கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 147 சதவீதம் அதிகரித்து 489 நிறுவனங்கள், இந்த தரவரிசையில் பங்கேற்றன.
Times Higher Education (THE) அமைப்பு , தரவரிசையின் அளவுகோலாக, கற்பித்தல் திறன், ஆராய்ச்சி, அறிவு பகிர்வு, சர்வதேச தரம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.