scorecardresearch

ரூ500 கோடிக்கும் மேல் பிஸினஸ்; ஐஐடி படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு சாதித்த அங்கித் பிரசாத்

IIT Dropout Series: Jharkhand boy left IIT Delhi for own startup, now runs a Rs 500-crore company with global partnerships: சொந்த தொழிலை தொடர ஐஐடி படிப்பை பாதியில் விட்ட அங்கித்; உலகளாவிய நிறுவனங்களுடன் 500 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸினஸ் செய்து வருகிறார்

ரூ500 கோடிக்கும் மேல் பிஸினஸ்; ஐஐடி படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு சாதித்த அங்கித் பிரசாத்

ஜார்க்கண்டில் உள்ள ஒரு சிறிய நகரமான சாய்பாசாவைச் சேர்ந்த அங்கித் பிரசாத் எப்போதும் ஒரு தொழில்முனைவோராக இருக்க விரும்பினார். உறவினர்கள் அவரிடம் வழக்கமான கேள்வியான “நீங்கள் வளர்ந்தவுடன் என்ன ஆவீர்கள்?” என்று கேட்டப்போது, அங்கித் எப்போதும், “பில் கேட்ஸ்” என்று பதிலளித்தார்.

கணினிகள் எப்போதும் அங்கித்தைக் கவர்ந்தன, மேலும் அவர் ஒரு தொலைநோக்கு பார்வையுள்ள தந்தையைப் பெற்றிருந்தார். 1995 இல் சாய்பாசாவில் முதன்முதலாக கணினியை வாங்கியவர் அங்கித் தான். இதன்மூலம் அங்கித், பில் கேட்ஸால் தொடங்கப்பட்ட தொழில்நுட்ப புரட்சியின் ஒரு பகுதியாக ஆனார்.

அதே நேரத்தில், அங்கித்தின் தந்தை ரஞ்சித் பிரசாத்க்கு, என்ஐடி ஜாம்ஷெட்பூரில் புவியியல் பேராசிரியராக வேலை கிடைத்ததும், பிரசாத் குடும்பம் விரைவில் ஜாம்ஷெட்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கித் மற்றும் அவரது இரண்டு வயது மூத்த சகோதரர் ராகுல் இருவரும் சாய்பாசாவில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திரில் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தனர். NIT ஜாம்ஷெட்பூரில் உள்ள DAV பள்ளியில் சேரும் வரை இருவராலும் ஆங்கில எழுத்துக்களைக் கற்றுக் கொள்ள முடியவில்லை.

“ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வது எதிர்பார்த்ததை விட கடினமாக இருந்தது. ஆங்கில புலமை தேவைப்படும் அனைத்து பாடங்களும் என்னை பயமுறுத்தத் தொடங்கின, அப்போதுதான் கணிதம் எனது சிறந்த நண்பராக மாறியது. இதற்கு வாக்கியத்தைப் பற்றிய பெயரளவு புரிதல் மட்டுமே தேவைப்பட்டது, இது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது, ”என்று 30 வயதான அங்கித் கூறினார்.

குழந்தை பருவத்திலிருந்தே, சகோதரர்களுக்கு கணினியில் ஆர்வம் இருந்தது. ஆறு வயதிலிருந்தே, அங்கித் குறியீட்டு (Coding) முறையில் சிறந்து விளங்கினார். அவர்கள் இருவரும் 2005 இல் வலை வடிவமைப்பைத் (Website Design) தொடங்கினர் மற்றும் உள்ளூர் உணவகங்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஹோட்டல்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கும் ஒரு சிறிய நிறுவனத்தை நிறுவினர். அவர்களின் இந்த சிறு வணிகம் விரைவில் வெற்றி பெற்று லாபம் ஈட்டத் தொடங்கியது.

2005 ஆம் ஆண்டில், ஒரு சராசரியாக படிக்கக்கூடிய பையன், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியின் முதல் 3 மதிப்பெண் பெற்றவர்களில் ஒரு இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான். சமூகத்தில் எல்லோரையும் போல், ​​​​அங்கித்-ம் ஐஐடிகளால் ஈர்க்கப்பட்டார். “ஐஐடி மீதான மக்களின் பெருவிருப்பத்தையும் வெற்றியின் வரையறையையும் நான் உணர்ந்தேன்” என்று அங்கித் கூறினார்.

ஐஐடி நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்காக ஜாம்ஷெட்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் அங்கித் சேர்ந்தார். குழந்தைப் பருவம் முழுவதும், அங்கித் ஹைப்பர் மயோபியாவால் பாதிக்கப்பட்டார் மற்றும் பார்வை -18 மற்றும் -19 ஆக இருந்தது. 2017-ம் ஆண்டு தான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சாதாரண பார்வை கிடைத்தது. முன்னதாக, கரும்பலகையில் பயிற்சி ஆசிரியர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை அவரால் பார்க்க முடியாமல் சிரமப்பட்டார் மற்றும் பெரிய வகுப்பு அளவுகள் அவரைத் தொந்தரவு செய்தன. “எங்கள் வலைத்தள வணிகம் எனக்கு பயிற்சிச் செலவுகளுக்கு உதவியது, ஆனால் நான் பயிற்சி செயல்முறையை ரசிக்கவில்லை,” என்று அங்கித் கூறினார்.

“அழுத்தமான சூழ்நிலையில்” ஒரு வருடம் செலவழித்த பிறகு, அவர் இறுதியாக பயிற்சி மையத்தை விட்டு விலகி தானாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார். 2007 ஆம் ஆண்டில், அவர் நுழைவுத் தேர்வில் பங்கேற்று 5000 க்கு மேல் ரேங்க் பெற்றார், இதனால் அவரால் ஐஐடியில் சேர்க்கைப் பெற முடியவில்லை, ஆனால் என்ஐடி ஜாம்ஷெட்பூரில் இடம் கிடைத்தது. அங்கு அவர் சேர்க்கை எடுத்தார், ஆனாலும் ஐஐடியில் சேர விரும்பினார்.

“என் சகோதரர் ஐஐடியில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர விரும்பினார், ஆனால் அவரால் நுழைய முடியவில்லை. அதனால், என் பெற்றோர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர், ஆனால் எனது முதல் முயற்சி திட்டமிட்டபடி நடக்கவில்லை. எனவே, நான் மறுமுறை நுழைவுத் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 400-வது இடம் பெற்றேன், ”என்று அங்கித் கூறினார், பின்னர் 2008 இல் கணிதம் மற்றும் கணினியில் ஒருங்கிணைந்த எம்டெக் படிப்பாக டெல்லி ஐஐடியில் சேர்ந்தார்.

ஐஐடி டெல்லியில் சேர்ந்த பிறகும் அங்கித் தனது தொழிலைத் தொடர்ந்தார். விரைவில், வணிகம் விரிவடைந்தது, அவர் சீராக சம்பாதிக்கத் தொடங்கினார். 2009-10 வரை, அவர் பல ஸ்டார்ட்அப்களுடன் பணியாற்றினார். “நான் கல்லூரியில் இருந்தேன், ஆனால் ஏற்கனவே நல்ல பணம் சம்பாதிக்கும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். தொழில்முறை காலக்கெடுவைக் கடைப்பிடிப்பது எனது வகுப்புகளைத் தடுக்கத் தொடங்கியது, ஆனால் பொறியியல் வகுப்புகளில் கற்பிக்கப்படும் தத்துவார்த்த ஆராய்ச்சி-உந்துதல் பாடத்திட்டத்திற்கு மாறாக எனது வேலையை நான் ரசித்தேன்,” என்று அங்கித் கூறினார்.

Flipkart, Snapdeal மற்றும் Zomato ஆகியவற்றின் வெற்றி அங்கிட்டை ஊக்கப்படுத்தியது மற்றும் அவர் தனது சகோதரருடன் 2012 இல் விடுதி அறையில் இருந்து டச் டேலண்டை உருவாக்கினார். இது இணைய அடிப்படையிலான உலகளாவிய சமூகமாகும், இது பயனர்கள் கலை மற்றும் வடிவமைப்பைக் காண்பிக்க, பகிர, பாராட்ட மற்றும் பணமாக்க அனுமதிக்கிறது. அதே நேரத்தில், அவர் குறைந்த வகுப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார், மேலும் செமஸ்டர் தேர்வுகளுக்கு வர முடியவில்லை. அப்போதுதான் பொறியியல் பட்டப்படிப்புக்குப் பதிலாக முழு நேரத் தொழிலில் ஈடுபட முடிவு செய்தார்.

இருப்பினும், அங்கித் வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் துறையில் ஈடுபட விரும்பினார் மற்றும் 2015 இல் ‘Bobble AI’ ஐ நிறுவினார், இது ‘Bobble Indic’ விசைப்பலகையை உருவாக்கியது. உலகெங்கிலும் உள்ள 120 மொழிகள் மற்றும் 37 இந்திய மொழிகள் ஆகியவற்றை இந்த விசைப்பலகை மூலம் பயன்படுத்த முடியும். Bobble AI இன் மதிப்பீடு 2020 ஆம் ஆண்டில் 500 கோடிகளுக்கு மேல் பதிவாகியுள்ளது, இது 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 750 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

டச் லேண்ட் ஆப் ஸ்டிக்கர்கள், GIFகள், எமோஜிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி, குறுஞ்செய்தி அனுப்புவதை மிகவும் வெளிப்படையானதாகவும் காட்சிப்படுத்தவும் செய்கிறது. இந்த ஆப் இப்போது 65 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஐரோப்பாவில் Xiaomi, Gionee, Panasonic மற்றும் Lava போன்ற உலகளாவிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் கூட்டாண்மை கொண்டுள்ளது.

“21 வயதில் எனது சிறிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்று என்னை அழைத்தபோது மக்கள் என்னைக் கேலி செய்தனர். நான் கடினமான பாதையில் சென்றேன், என் உறவினர்களில் பெரும்பாலோர் அதைப் பெறவில்லை. இருப்பினும், எனது பெற்றோரின் திறந்த மனப்பான்மை எனது சொந்த முடிவுகளை எடுக்க அனுமதித்தது, ”என்று அங்கித் கூறினார்.

அங்கித் 2018 இல் 30 வயதிற்குட்பட்ட ஃபோர்ப்ஸ் 30 பட்டியலில் இடம்பிடித்தார், அப்போதுதான் அவரைப் பற்றிய “மக்களின் கருத்து மாறியது”. “இது எனது முதல் அங்கீகாரம் மற்றும் இது சரியான பாதையில் செல்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது” என்று அங்கித் கூறினார். தவிர, பிசினஸ் வேர்ல்ட் பத்திரிகையின் 40 வயதுக்குட்பட்ட 40 பட்டியலிலும் அங்கித் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

“இன்றும் கூட, நான் என்ன செய்கிறேன் அல்லது நிறுவனம் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறது என்பது என் அம்மாவுக்குப் புரியவில்லை, ஆனால் அவர் எனது ஊடாடும் விசைப்பலகையைப் பயன்படுத்தி அனைவருடனும் தொடர்பு கொள்கிறார், அது மிகவும் நன்றாக இருக்கிறது” என்று ஐஐடி டெல்லியில் இருந்து இடைநின்ற அங்கித் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Iit dropout series jharkhand boy left iit delhi to work on his startups runs 500 crore company with global partnerships

Best of Express