கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வரும் நிலையில், அதன் தாக்கத்தைக் குறைக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இந்தியாவின் உயர்க்கல்வி ஆராய்ச்சியாளர்களும், இந்த போரில் தங்கள் பங்களிப்பை உறுதி செய்து வருகின்றனர்.
சில முயற்சிகளை இங்கே காணலாம்:
ஐ.ஐ.டி-டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றை சோதிக்கும் ஒரு புதிய முறையைக் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், தற்போது 4,500 ரூபாயாக இருக்கும் கொரோனா வைரஸ் சோதனையின் விலை கடுமையாகக் குறையும் என்று கூறப்படுகிறது.
புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) மருத்துவ மாதிரிகளில் இந்த சோதனையை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஐ.ஐ.டி-கவுஹாத்தியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி மருந்தையும், சோதனை கருவியும் உருவாக்கி வருகிறது. பயோடெக்னாலஜி பிரிவின் கீழ் உள்ள வைரஸ் நோயெதிர்ப்பு ஆய்வகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் சச்சின் குமார் தலைமையில் இந்த குழு இயங்கி வருகிறது.
நோய்களுக்கான தீர்வைக் கண்டுபிடிக்க, ஆராய்ச்சியாளர்கள் "SARS-CoV-2 இன் நோயெதிர்ப்பு புரதங்களை கண்டறிந்து தடுப்பூசியாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்" என்று ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி காரக்பூரைச் சேர்ந்த மாணவர்கள் 12 பிராந்திய இந்திய மொழிகளில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீர், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வீடியோ உருவாக்கப் பட்டுள்ளது. 20 பேர் கொண்ட இந்த குழுவின் முயற்சிகளை, மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, தனது சமூக இடுகையில் பாராட்டியுள்ளார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகமாகாமல் தடுக்க, பல ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் கை சுத்திகரிப்பானைத் தயாரித்து , வளாகத்திலும், சமூகத்திலும் இலவசமாக கிடைக்க வழிவகை செய்கின்றன.
சிவகல்யாணி அடேபு, முத்ரிகா கண்டேல்வால் என ஐ.ஐ.டி-ஹைதராபாத்தைச் சேர்ந்த இரண்டு பெண் ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியை முதன் முதலில் தொடங்கினர். ஐ.ஐ.டி ரூர்க்-வை சேர்ந்த சித்தார்த் சர்மா, வைபவ் ஜெயின் ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் 150 லிட்டருக்கும் அதிகமான மூலிகை கை சானிடிசரைத் தயாரித்தனர், இது மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது. ஐ.ஐ.டி-ரூர்க்கி வளாகத்தில் இது இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஐ.ஐ.டி-பம்பாய் கல்வி நிறுவனம் அதன் நான்கு விடுதி வாயில்களைத் வைரஸ் தொற்று தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாகப் பயன்படுத்த முன்வருகிறது.
தெலுங்கானாவின் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், கவுதம் புத்தர் பல்கலைக்கழகம், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம், போன்ற கல்வி நிறுவனங்கள் தங்களது காலி அறைகளை கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக பயன்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. இது தொடர்பாக, அதிகாரிகள் பலரை அணுகி வருகின்றனர்.