சென்னை ஐஐடியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பேராசியராக இருக்கும் காமகோடி வீழிநாதன், தற்போது ஐஐடி மெட்ராஸின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சக்தி என்ற நுண்செயலியை உருவாக்கிய குழுவிற்கு தலைமை தாங்கியவர் ஆவர்.
ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரும்,செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணராக இருக்கும் அவர், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் செயற்கை நுண்ணறிவு பணிக்குழுவின் தலைவராகவும், மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.
தற்போது இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி மற்றும் ஸ்பான்சர்டு ரிசர்ச் (ஐசிஎஸ்ஆர்) துறையின் இணைத் தலைவராக உள்ளார்.
இவருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர், “காமகோடி வீழிநாதன் தலைமையில் ஐஐடி மெட்ராஸ் புதிய உச்சத்தை வரும் ஆண்டுகளில் அடையும். அவர் திறமையான பேராசிரியர், ஆராய்ச்சியாளர் மட்டுமின்றி சிறந்த நிர்வாகியும் ஆவர். குறிப்பாக கம்பூயுட்டிங் மற்றும் சைபர்பாதுகாப்பில் நிபுணரான இவர், பல தேசிய அளவிலான திட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய வீழிநாதன், ” தேசிய கல்விக் கொள்கை நோக்கத்தின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திறன்களை அதிகரிப்பதே தம்முடைய உடனடி குறிக்கோள்” என தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வீழிநாதன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் 1989இல் கம்ப்யூட்டர் சைன்ஸ் படிப்பை முடித்தார். பின்னர், ஐஐடி மெட்ராஸில் அறிவியல் துறையில் மேற்படிப்பையும், கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் பிஹெச்டி படிப்பையும் 1992 மற்றும் 1995 ஆண்டுகளில் முறையே படித்து பட்டம் பெற்றார்.
இதையடுத்து, 2001இல் ஐஐடி மெட்ராஸில் துறை பேராசரியாக பணியில் சேர்ந்தார். 2020இல் அப்துல் கலாம் டெக்னாலஜி இன்னோவேஷன் நேஷனல் பெல்லோஷிப், 2018இல் IESA டெக்னோ விஷனரி விருது,2016இல் IBM ஆசிரியர் விருது,2013இல் DRDO அகாடமி சிறப்பு விருது உட்பட பலவற்றை வாங்கி குவித்தார்.
சென்னை ஐஐடியின் இயக்குநராக உள்ள பாஸ்கர் ராமமூர்த்தியின் இரண்டாண்டு பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, அந்த பதவிக்கு காமகோடி நியமிக்கப்பட்டார்.
ராமமூர்த்தியின் பதவி காலத்தின்போது, NIRF தரவரிசை பட்டியலில் பொறியியல் கல்லூரிகள் பிரிவில் தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தையும், ஒட்டுமொத்த கல்லூரிகள் பிரிவில் மூன்று ஆண்டுகளாக முதலிடத்தையும் பிடித்து வந்தது. அதே போல், அடல் நிறுவன தரவரிசையில் புதுமையான சாதனைகள் பிரிவில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil