/tamil-ie/media/media_files/uploads/2023/08/IIT-Madras.jpg)
விளையாட்டில் சிறந்து விளங்குபவரா? ஐ.ஐ.டி மெட்ராஸில் படிக்கலாம்; தனி கோட்டா அறிமுகம்; விபரங்கள் இங்கே
JEE Main 2024: இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras - ஐ.ஐ.டி மெட்ராஸ்) இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கைக்கான விளையாட்டு ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. ஒரு ‘ஸ்போர்ட்ஸ் எக்ஸலன்ஸ் அட்மிஷன்’ (SEA) 2024-2025 கல்வியாண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும், இதன் கீழ் ஐ.ஐ.டி மெட்ராஸ் 30 இளங்கலை பொறியியல் இடங்களை வழங்குகிறது.
SEA மூலம் சேர்க்கை செயல்முறையில் பங்கு பெற மாணவர் JEE அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றாலும், சீட் ஒதுக்கீடு கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) போர்டல் மூலம் சேர்க்கை இருக்காது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ஐ.ஐ.டி மெட்ராஸ் சேர்க்கை நிறுவனம் நடத்தும் தனி போர்டல் மூலம் சீட் ஒதுக்கீடு நடைபெறும். இது https://jeeadv.iitm.ac.in/sea/
இதுதொடர்பாக சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் வி.காமகோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது; ஐ.ஐ.டி வரலாற்றில் முதல் முறையாக விளையாட்டு பிரிவுகளுக்காக இளநிலை படிப்புகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் அடிப்படையிலேயே இது கொண்டு வரப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள் என நினைத்து இதை இப்போது தொடங்கியுள்ளோம்.
பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு 2 இடங்களை இப்போது ஒதுக்கியுள்ளோம். சர்வதேச அளவில் தங்கம் வென்றவருக்கு 100 புள்ளிகள், வெள்ளிக்கு 90 புள்ளிகள், வெண்கலத்துக்கு 80 புள்ளிகள், பங்கேற்றிருந்தால் 50 புள்ளிகள் என தேசிய அளவிலான புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த புள்ளிகளும் மாணவர் சேர்க்கையில் கணக்கில் கொள்ளப்படும்.
2024-25 ஆண்டில் கிரிக்கெட், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 13 விளையாட்டுகளில் சிறந்தவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2 அல்லது 4 ஆண்டுகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என நம்புகிறோம்.
ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் இருக்கும் மாணவருக்கு இலவசக் கல்வி வழங்குகிறோம். ஜே.இ.இ மெயின், அட்வான்ஸ்டு தேர்வு மூலமும், மேற்சொன்ன புள்ளிகள், வெயிட்டேஜ் அடிப்படையிலும் தரவரிசை பட்டியல் வெளியிட்டு, இடங்களை நிரப்புவோம். ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிந்ததும் மாணவர் சேர்க்கை தொடங்கும்.
ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் 7, 8-ம் வகுப்புகளுக்கு பிறகு விளையாட்டு மைதானத்துக்கே செல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதைமாற்றும் நோக்கில், விளையாடினாலும், விளையாட்டு பிரிவு மூலம் ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்றாலே இனி ஐ.ஐ.டி.,யில் சேர முடியும்.
விளையாட்டு பிரிவில் சேரும் மாணவர்களுக்கு இங்கு என்ன மாதிரியான படிப்புகள் வழங்குவார்கள் என்ற கேள்வி எழும். அதற்காக விளையாட்டு ஆய்வு மையம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். விளையாட்டு சார்ந்த படிப்புகளையும் தொடங்குகிறோம். இவ்வாறு ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.