/indian-express-tamil/media/media_files/2025/10/04/nipta-initiative-2025-10-04-21-18-56.jpg)
இன்ஜினியரிங், டிப்ளமோ மாணவர்களே... ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியது என்.ஐ.பி.டி.ஏ திட்டம்!
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் Shaastra Magazine மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான திறன்கள் மற்றும் இன்டர்ன்ஷிப் தயார்நிலைக்கு நிலையான அளவுகோலை உருவாக்கும் நோக்கத்துடன் தேசிய இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு (NIPTA) முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி, இத்திட்டம் பொறியியல், டிப்ளமோ மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முறையான பயிற்சித் திட்டத்துடன், வேலைவாய்ப்புத் திறனை அளவிடுவதற்கான தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வையும் இணைக்கிறது. இந்த முயற்சி 10 முதல் 12 வாரங்கள் வரையிலான கட்டமைக்கப்பட்ட பயிற்சி திட்டத்தை வழங்கும். இதில், தொழில்நுட்ப அறிவு, கணிதத் திறன், தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் தகவல் தொடர்புத் திறன் ஆகியவை இடம்பெறும். மாணவர்களுக்கு வீடியோ விரிவுரைகள் மற்றும் மாதிரி கேள்விகள் போன்ற இலவசப் பயிற்சி வளங்கள் வழங்கப்படும். பயிற்சி காலம் முடிந்ததும், நாடு முழுவதும் உள்ள நியமிக்கப்பட்ட மையங்களில் 3 மணிநேர நேரடி மேற்பார்வையுடன் கூடிய மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தத் தேர்வில் 3-ம் மற்றும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்கள், சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு டிப்ளமோ மாணவர்கள் மற்றும் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி வளங்கள் இலவசமாக வழங்கப்பட்டாலும், மாணவர்கள் தேர்வுக்கு ஒரு சிறு கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
சான்றிதழ்: பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் வழங்கும், செயல்திறன் அடிப்படையிலான சான்றிதழ் வழங்கப்படும். இது மாணவர்களின் திறன்கள், தகுதிகளை வெளிப்படையாகக் காட்டும் ஒரு குறியீடாகச் செயல்படும். இந்த மதிப்பீட்டு முடிவு பணியமர்த்தும் நிறுவனங்களுடன் (Recruiters) பகிரப்படும் என்றும், இது நிறுவனங்கள் திறமையானவர்களை மிகவும் திறமையாக அடையாளம் காண உதவும் என்றும் ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களை வேலை வழங்குபவர்களுடன் இணைப்பதற்காக, ஐஐடி மெட்ராஸ் 2026-ன் தொடக்கத்தில் நேரில் அல்லது ஆன்லைனில் ஒரு தேசிய வேலை மற்றும் இன்டர்ன்ஷிப் மேளாவை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மந்திர பிரதான், ஐஐடி மெட்ராஸ்-ல் இந்த முயற்சியைத் தொடங்கி வைத்தார். இத்திட்டம் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, இந்த முயற்சி நிறுவனத்தின் “அனைவருக்கும் ஐஐடிஎம்” என்ற குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது என்றும், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஜனநாயகப்படுத்த இது உதவும் என்றும் கூறினார்.
சாஸ்திரா பத்திரிகையின் ஆசிரியர் குழுத் தலைவரும், மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியருமான பேராசிரியர் ஸ்ரீகாந்த் வேதாந்தம், NIPTA திட்டம் வேலைவாய்ப்புத் திறனை அளவிடக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஐஐடி மெட்ராஸ்-ன் மாதப் பத்திரிகையான சாஸ்திரா, இந்தியா மையப்படுத்தப்பட்ட கண்ணோட்டத்துடன் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.