ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியுள்ள கலப்பு மருத்துவப் பட்டப்படிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அனுமதிக்கப்பட்ட 30 இடங்களுக்கு 6,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி மெட்ராஸ் கலப்பு மருத்துவப் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படிப்பில் சேரும் மாணவர்கள் உடற்கூறியல், உறுப்புகளின் உடலியல், உறுப்பு அமைப்பின் கணித மாதிரியாக்கம், உறுப்பு அமைப்பின் நோயியல் மற்றும் அடிப்படை பொறியியல் கோட்பாடுகள், அடிப்படை அறிவியல், இயந்திர கற்றல் மற்றும் பிறவற்றைப் படிப்பார்கள்.
இதையும் படியுங்கள்: TNEA Counselling 2023: மெரிட் மேனேஜ்மெண்ட் கோட்டா என்பது என்ன? புதிதாக இணைந்த டாப் கல்லூரி எது?
இந்தநிலையில், இந்தப் படிப்புக்கு 30 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 6000 பேர் விண்ணப்பித்துள்ளனர். “முதல் தொகுதிக்கான விண்ணப்பங்களை 1:20 என்ற விகிதத்தில் பெற்றுள்ளோம். இந்தப் படிப்புக்கு IISER திறனறி தேர்வு (IAT) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். பாடநெறி ஜூலை 31 ஆம் தேதி தொடங்கும்,” என்று ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனர் வி காமகோடி கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஐ செயல்படுத்த ஐ.ஐ.டி மெட்ராஸ் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் பற்றிய விளக்கிய இயக்குனர் வி காமகோடி, "இந்த கலப்பு மருத்துவப் படிப்பு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் கீழ் உள்ள முன்முயற்சிகளில் ஒன்றாகும், இது இடைநிலை படிப்புகளை ஊக்குவிக்கிறது," என்று கூறினார்.
"ஐ.ஐ.டி மெட்ராஸ் ஏழு மருத்துவமனைகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது மற்றும் மாணவர்களுக்கு கற்பிக்க பயிற்சி பேராசிரியர்களாக மருத்துவர்களை இணைத்துள்ளது" என்று ஐ.ஐ.டி மெட்ராஸின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைவர் பாபி ஜார்ஜ் கூறினார்.
இந்த ஆண்டு 100 ஸ்டார்ட்அப்களை உருவாக்க இலக்கு வைத்துள்ளதாக காமகோடி கூறினார். "எங்கள் பதிவுகளின்படி, எங்கள் மாணவர்களில் 5% மட்டுமே வெளிநாடுகளில் முகவரிகளைக் கொடுத்துள்ளனர். இருப்பினும், பலர் இன்னும் MNC நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். எங்கள் மாணவர்கள் அனைவரையும் ஸ்டார்ட்அப்களுக்கு ஈர்க்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
இதனிடையே ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகமான தான்சானியாவில் உள்ள சான்சிபாரில் அக்டோபர் 25 ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. முதல் ஆண்டில், இந்த நிறுவனம் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஒரு இளங்கலைப் படிப்பையும், ஒரு முதுகலை படிப்பையும் வழங்கும். இந்தியா உட்பட அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். ஸ்கிரீனிங் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள், என்று இயக்குனர் கூறினார்.
மேலும், பள்ளி மட்டத்தில் நல்ல கணித ஆசிரியர்களை உருவாக்குவதற்கு BEd உடன் BSc (கணிதம் மற்றும் கணினி) படிப்பை தொடங்கவும் ஐ.ஐ.டி மெட்ராஸ் திட்டமிட்டுள்ளது. மற்றொரு முயற்சியில், ஆண்டுதோறும் 250 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 25,000 மாணவர்களுக்கு அடிப்படை மின்னணுவியல் பயிற்சி அளிக்க ஐ.ஐ.டி மெட்ராஸ் திட்டமிட்டுள்ளது. இது அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்.
ஐ.ஐ.டி மெட்ராஸின் ஆன்லைன் பட்டப்படிப்பான BS தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள் படிப்பில் சுமார் 25,000 விண்ணப்பதாரர்கள் சேர்ந்துள்ளனர், இரண்டாவது ஆன்லைன் பட்டப்படிப்பான மின்னணு அமைப்புகள் படிப்பில் 1,800 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.