கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்புகள் உலகளவில் அதிகம் விரும்பப்படும் படிப்புகளில் ஒன்றாகும். வளமான வேலை வாய்ப்பு காரணமாக கணினி சார்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் விரும்புகின்றனர்.
இந்தநிலையில், மாணவர்களுக்கு உதவும் வகையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IIT Madras) ஸ்வயம் (SWAYAM) மூலம் கம்ப்யூட்டர் சார்ந்த சிறந்த ஆன்லைன் படிப்புகளைப் வழங்குகிறது. இதில் 5 விதமான படிப்புகள் 4 ஐ.ஐ.டி.,களின் பேராசிரியர்களால் நடத்தப்படுகிறது. இவை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சி புரோகிராமிங் மற்றும் அசெம்ப்ளி லாங்குவேஜ், பேராசிரியர் ஜானகிராமன், ஐ.ஐ.டி சென்னை
ஐ.ஐ.டி சென்னை இந்தப் படிப்பை நடத்துகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் சி புரோகிராமிங் மற்றும் மைக்ரோப்ராசசர்களைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ளலாம். மைக்ரோப்ராசசர்கள் மற்றும் அசெம்பிளி லாங்குவேஜ், சி மற்றும் இன்லைன் அசெம்பிளி, சி அசெம்பிளி மொழிக்கு தொகுத்தல் மற்றும் C++ மற்றும் சிறப்பு செயல்பாடுகள் பற்றிய அறிமுகம் இந்த கோர்ஸில் வழங்கப்படும்.
தரவு அறிவியலுக்கான பைதான், பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி, ஐ.ஐ.டி சென்னை
ஐ.ஐ.டி சென்னையால் நடத்தப்படும் இந்த பாடநெறி ஸ்பைடர், வரிசை தரவு வகைகள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள், தரவு சட்டகம் தொடர்பான செயல்பாடுகள் போன்றவற்றின் அறிமுகத்தை வழங்குகிறது. கடைசி வாரத்தில் தனிநபர் வருமானத்தை வகைப்படுத்துவது மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையை கணிப்பது பற்றிய திட்ட ஆய்வையும் வழங்குகிறது.
நெட்வொர்க்கிங், பேராசிரியர் ஸ்ரீதர் ஐயர், ஐ.ஐ.டி பாம்பே
ஐ.ஐ.டி பாம்பேயால் நடத்தப்படும், நெட்வொர்க்கிங் கோர்ஸ், கணினி துறையில் அனுபவம் இல்லாத மாணவர்களுக்கான நெட்வொர்க்கிங் கருத்துகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது. மாணவர்களுக்கு நெட்வொர்க்கிங் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவும் தொழில்நுட்பங்களை இந்த பாடநெறி ஆழமாக ஆராய்கிறது. இதில் பாதுகாப்பு, சரிசெய்தல், பயன்பாட்டு அடுக்கு, ரூட்டிங் போன்றவை அடங்கும்.
பிக் டேட்டா கம்ப்யூட்டிங், பேராசிரியர் ராஜீவ் மிஸ்ரா, ஐ.ஐ.டி பாட்னா
கணினி கட்டமைப்பு, தரவு கட்டமைப்பு மற்றும் வழிமுறைகள், தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் மற்றும் இயக்க முறைமைகள் தொடர்பான பல காரணிகளைப் புரிந்துகொள்ள இந்தப் பாடநெறி மாணவர்களுக்கு உதவும். பிக் டேட்டா பிளாட்ஃபார்ம்கள், தொழில்நுட்பங்களை இயக்குதல், பெரிய தரவு பயன்பாடுகள் மற்றும் பிக் டேட்டா ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்களை மாணவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.
மெசின் லேர்னிங் அறிமுகம், பேராசிரியர் சுதேஷ்னா சர்க்கர், ஐ.ஐ.டி காரக்பூர்
பாடத்திட்டம் டீப் லேர்னிங் பற்றிய புரிதல் மற்றும் அடிப்படை கிளஸ்டரிங் அல்காரிதம்களை உள்ளடக்கும். இது இயந்திர கற்றல், நேரியல் பின்னடைவு, அதிக பொருத்தம், டிசிசன் ட்ரீஸ், லாஜிஸ்டிக் பின்னடைவு, நரம்பியல் நெட்வொர்க்குகள் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தும்.