இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு சென்னை ஐ.ஐ.டி.-க்கு ரூ. 228 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான கிருஷ்ணா சிவுகுலா.
யார் இந்த கிருஷ்ணா சிவுகுலா?
டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸின் (ஐ.ஐ.டி.எம்) விருது பெற்ற முன்னாள் மாணவர் ஆவார். இவர் கடந்த 1970 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி-யில் விண்வெளி பொறியியலில் எம்.டெக் படிப்பதற்காக சேர்ந்தார். தற்போது அவர் இந்திய யு.எஸ் எம்.ஐ.எம் டெக் என்கிற நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த நன்கொடை இந்தியாவில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்று என சென்னை ஐ.ஐ.டி அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடையானது சர்வதேச மாணவர்கள் சென்னை ஐ.ஐ.டி-யில் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சி சிறப்பு மானியத் திட்டம் மற்றும் புதியவர்களுக்கான யு.ஜி பெல்லோஷிப் திட்டம் போன்ற பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது. அத்துடன், இந்த நன்கொடையானது விளையாட்டு அறிஞர் நிகழ்ச்சி, சாஸ்த்ரா இதழ் மேம்பாடு மற்றும் கிருஷ்ணா சிவுகுள பிளாக் பராமரிப்பு போன்ற பிற செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “பல தசாப்தங்களுக்குப் பிறகும் எங்கள் முன்னாள் மாணவர் தான் பயின்ற முன்னாள் கல்லூரியை இன்னும் நினைவில் வைத்திருப்பது, கல்வி மட்டுமே மனிதகுலத்திற்கு நாம் அளிக்கும் ஒரே அழியாத செல்வம் என்பதை வலுப்படுத்துகிறது. கிருஷ்ணா சிவுகுலாவின் பெரும் பங்களிப்பிற்கு நன்றி, இது பல எதிர்கால சந்ததி மாணவர்களின் அறிவைப் பின்தொடர்வதில் பயனளிக்கும்." என்று கூறினார்.
கடந்த ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டி பெற்ற நன்கொடைகள்
சென்னை ஐ.ஐ.டி 2023-24 ஆம் ஆண்டில், ரூ.513 கோடியை நன்கொடையாகப் பெற்றது. இது முந்தைய நிதியாண்டை விட 135 சதவீதம் அதிகமாகும். சென்னை ஐ.ஐ.டி-க்கு ரூ.1 கோடிக்கு மேல் நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை 48 (16 முன்னாள் மாணவர்கள் மற்றும் 32 கார்ப்பரேட் பார்ட்னர்கள்) என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிதியானது சென்னை ஐ.ஐ.டி முன்னாள் மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து சி.எஸ்.ஆர் நிதிகள் மற்றும் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மானியங்களுடன் கூடுதலாக திரட்டப்பட்டது.
2023-24 ஆம் ஆண்டில் முன்னாள் மாணவர்கள் மூலம் மட்டும் திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ. 367 கோடி ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 282 சதவீதம் அதிகமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“