இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 23 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐஐடி) 19 ஐ.ஐ.டிகளில் பட்டியல், பழங்குடியினருக்கான (எஸ்சி/எஸ்டி) செல்கள் நிறுவப்பட்டுள்ளது. அவற்றில் 5 செல்கள் மட்டுமே மாணவர்களுக்கான நிகழ்வுகள் நடத்தியுள்ளன. 2 ஐ.ஐ.டிகளைத் தவிர மற்ற எந்த ஐ.ஐ.டிகளிலும் செல்களுக்கு தனி நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும் 3 ஐ.ஐ.டிகள் மட்டுமே செல் செயல்பட தனி அறை ஒதுக்கியுள்ளன என்று தெரிய வந்துள்ளது.
ஐ.ஐ.டிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் ஐ.ஐ.டி பாம்பேயில் உள்ள மாணவர் கூட்டமைப்பான அம்பேத்கர் பெரியார் புலே ஆய்வு வட்டம் (ஏ.பி.பி.எஸ்.சி) ஐ.ஐ.டிகளில் எஸ்.சி,எஸ்.டி செல்கள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி மனு அளித்திருந்தது. அதனடிப்படையில் இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐ.ஐ.டிகளில் எஸ்சி/எஸ்டி செல்கள் பெயரளவில் மட்டுமே உள்ளன, அதன் செயல்பாடுகள் குறைவாகவே உள்ளன என்பதை இந்த தகவல் வெளிப்படுத்துகிறது என்று குழு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், செல்கள் அமைக்கப்பட்ட 19 ஐ.ஐ.டிகளில் 12 கல்லூரிகள் மட்டுமே இணையப் பக்கம் கொண்டுள்ளன என்றும் ஐ.ஐ.டி குவஹாத்தியில் செல்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் இணையப் பக்கம் தொடங்கப்படவில்லை என்றும் ஏ.பி.பி.எஸ்.சி தரவு கூறுகிறது. இங்கு செல் நிகழ்வுகள் நடத்தப்பட வில்லை. ஆனால் செல் செயல்பட தனி அறை, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐஐடி குவஹாத்தியைத் தொடர்ந்து ஐஐடி டெல்லியிலும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 ஐஐடிகள் மட்டுமே செல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. ஐஐடி டெல்லி எஸ்சி/எஸ்டி செல் நிகழ்வுகள் நடத்தியுள்ளது. ஆனால் அதற்கென வளாகத்தில் தனி அறை இல்லை. ஐஐடி பாம்பேயில், எஸ்சி/எஸ்டி செல் செயல்பட தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது. ஆனால் தகுந்த நிதி ஒதுக்கப்படவில்லை. ஐஐடி ரூர்க்கியிலும் இதே நிலை தான் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
நான்கு ஐ.ஐ.டிகள் - காரக்பூர், மண்டி, ஐ.எஸ்.எம் தன்பாத் மற்றும் பி.ஹெச்.யூ கல்லூரிகளில் எஸ்.சி,எஸ்.டி பிரிவு செல்கள் இல்லை.
காந்திநகர், பிலாய், தார்வாட் மற்றும் இந்தூர் ஐ.ஐ.டிகளில் செல்கள் உள்ளன. ஆனால் நிகழ்வு நடத்தப்படவில்லை. நிதியோ, தனி அறை ஒதுக்கப்படவில்லை.
சமூக ஊடகங்களில் தரவுகளைப் பகிர்ந்த ஏ.பி.பி.எஸ்.சி இட ஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்தவும், விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தவும் ஐ.ஐ.டிகளுக்கு வலியுறுத்த வேண்டும் என கல்வித் துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏ.பி.பி.எஸ்.சி அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில், "பல ஐ.ஐ.டிகளில் எஸ்சி/எஸ்டி செல்கள் உருவாக்கிவிட்டதாக பதிலளித்த பிறகு, அவை செயல்படுகின்றனவா என்பதைக் கண்டறிவது முக்கியம். செல்களின் நோக்கம் நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். ஆனால் செல்கள் செயல்படவில்லை. பெயரளவில் மட்டுமே உள்ளன என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏ.பி.பி.எஸ்.சி இந்தத் தரவை தேசிய பட்டியல், பழங்குடியின ஆணையத்திடம் (NCST) வழங்க திட்டமிட்டுள்ளதாக"அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.