India post recruitment 2022 for 38926 GDS posts full details: போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். இந்தநிலையில், இந்த வேலை என்ன?, 10 ஆம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) உதவி தபால் அலுவலர் (ABPM) மற்றும் தபால் ஊழியர் (DakSevak) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022 ஆகும்
தபால் அலுவலக பணியிடங்கள்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 38,926
தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை – 4,310
கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : தபால் அலுவலர் (BPM) – ரூ.12,000
உதவி தபால் அலுவலர் மற்றும் தபால் ஊழியர் (ABPM/DakSevak) – ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022
விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
கிளை தபால் அலுவலர் (BPM) பதவி என்பது அலுவலகம் சார்ந்த பணிகளை செய்யும் வேலையாகும். உதவி கிளை தபால் அலுவலர் (ABPM) பதவி என்பது அலுவலகம் மற்றும் களப்பணி இரண்டையும் செய்யக் கூடிய வேலையாகும். டக் சேவக்ஸ் (தபால் ஊழியர்) பதவி என்பது முழுமையாக களப்பணி சார்ந்தது. அதாவது தபால் விநியோகம் செய்யும் வேலையாகும்.எனவே உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தபால் அலுவலர் பணியானது மற்ற பணிகளை விட சற்று உயர்வானது, மற்றும் அதிக சம்பளம் தரக்கூடியது. மேலும் பதவி உயர்வும் கிடைக்கும். எனவே அதற்கே முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யுங்கள்.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது என்பதால், நீங்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும். கடந்த முறை பெரும்பாலும் 97 சராசரி மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. குறைந்தப்பட்சமாக 87 சராசரி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. இதன்மூலம், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது தெரிகிறது. அதேநேரம் 90 சராசரி மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற நிறைய பேருக்கு வேலை கிடைத்துள்ளது. எனவே 10 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் மாற்றுதிறனாளிகள் பிரிவில் 85 சராசரி மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. எனவே 430 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ள மாற்று திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 90 சராசரி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கடந்த முறை வேலை கிடைத்துள்ளது. அதேநேரம் மற்ற பிரிவினருக்கு 90 சராசரி மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
மேலும் கடந்த முறை மாநிலம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் முன்னுரிமைகளை அளிக்க என்ற நிலையில், தற்போது ஒரே மாவட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்களுக்குள் மட்டுமே உங்களுக்கு போட்டி.
இதையும் படியுங்கள்: TNPSC Group 2 Cut Off: ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு; கட் ஆஃப் குறையுமா?
ஏனெனில், இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு முறை சம்பந்தப்பட்ட கிராம தபால் நிலையங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் யார் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கே வேலை கிடைக்கும். அதாவது நாம் விண்ணப்பிக்கும்போது, மாவட்டம், தலைமை தபால் நிலையம், துணை தபால் நிலையம், கிராம தபால் நிலையம் என்ற வரிசையில் தேர்வு செய்து விண்ணப்பிப்போம். ஒருவருக்கு 5க்கு மேற்பட்ட விருப்பங்கள் வழங்கப்படும். நீங்கள் விண்ணப்பித்த கிராம தபால் நிலைய பதவிக்கு, உங்களை விட பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால், உங்களுக்கு வேலை கிடைக்கும்.
இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை, மாநிலம் அல்லது இந்தியா முழுமைக்கான தரவரிசைப் பட்டியல் மூலம் நிரப்பப்படுவது கிடையாது. குறிப்பிட்ட கிராம தபால் நிலையத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும். இருப்பினும் நீங்கள் விண்ணப்பிக்கும் பகுதிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் உங்களுக்கு வேலை கிடைக்கும். எனவே பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அப்ளை பண்ணுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.