இந்திய ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சியில் ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் தீபக் குமார் கூறினார்.
இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி வாய்ப்பை வழங்கும் அக்னிபாத் திட்டம் மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளது. இந்த பணி வாய்ப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் மார்ச் 15 ஆகும்.
இதையும் படியுங்கள்: தமிழக வனத்துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் தீபக் குமார், அக்னிவீர் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு மயிலாடுதுறை முதல் கன்னியாகுமரி வரையிலான 16 தென்மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில் கலந்துக் கொள்ள விரும்பும் இளைஞர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆட்சேர்ப்பு பதிவு ஆன்லைன் வழியாக மட்டுமே செய்யப்படுகிறது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்தார்.
மேலும், தேர்வு செயல்முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார். தற்போது ஆட்சேர்ப்பு தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆட்சேர்ப்பு நடைமுறையில், உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை இறுதியாக எழுத்துத் தேர்வு நடைபெறும். ஆனால் இனிமேல், முதலில் ஆன்லைன் வழியாக எழுத்துத் தேர்வு நடைபெறும், அதனைத் தொடர்ந்து உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்றும் தீபக் குமார் தெரிவித்தார்.
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை தொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் பதிவுக்கு அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.joinindianarmy.nic.in/default.aspx என்ற பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil