திருச்சி துவாக்குடியில் உள்ள மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 21 வது பட்டமளிப்பு விழா ( 26 ஆம் தேதி) நாளை பிற்பகல் 3 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தேசியத் தொழில்நுட்பக் கழக இயக்குனர் டாக்டர் அகிலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 21 வது பட்டமளிப்பு விழா ( 26 ஆம் தேதி) நாளை நடைபெறவிருக்கின்றது. பட்டமளிப்பு என்பது அறிவாற்றலை வளர்ப்பதற்கும், திறமையை வளர்ப்பதற்கும், நிறுவனத்தின் உறுதிப்பாட்டின் தெளிவான பிரதிபலிப்பாக இது நிற்கிறது. முறையான கொண்டாட்டங்களுக்கு அப்பால், இந்த நிகழ்வு ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் பட்டதாரிகள் தங்கள் கல்விப் பட்டங்களை மட்டுமல்ல, உலகளாவிய குடிமக்கள் மற்றும் சமூகத்திற்கு பங்களிப்பவர்கள் என்ற வகையில் தங்கள் பொறுப்புகள் குறித்த உயர்ந்த விழிப்புணர்வையும் பெறுகிறார்கள். பாரம்பரியத்தை முன்னேற்றத்துடன் கலந்து, பட்டமளிப்பு விழா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது அறிவு, நேர்மை மற்றும் ஆய்வு மற்றும் தாக்கத்தின் பயணங்களில் ஈடுபடும் தனிநபர்களின் பரந்த திறனை மதிக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு விண்வெளித்துறையின் செயலாளரும், இஸ்ரோவின் தலைவருமான டாக்டர் வி. நாராயணன், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இந்தவிழாவில் 2045 பட்டதாரிகள் பட்டம் பெறுகின்றனர். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் மாணவி ஜெயஸ்ரீ தொழில்நுட்ப இளங்கலையில் ஒட்டுமொத்த மிகஉயர்ந்த மதிப்பெண் பெற்றதற்கான மதிப்புமிக்க குடியரசுத்தலைவர் பதக்கத்தையும் பெற உள்ளார்.
திருச்சிராப்பள்ளி தேசியத் தொழில்நுட்பக் கழகம் சிறந்த என்ஐடி ஆக திகழ்வதுடன் பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், உலகளாவிய பொருளாதார சவால்கள் இருந்த போதிலும் என்ஐடியில் பயின்ற 1322 மாணாக்கர்கள் முன்னணி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.