அமெரிக்காவில் உயர்கல்வி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2020-21 கல்வியாண்டில் 13.2 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், இது ஒரு தசாப்த்திற்கும் மேலாக சதவீத புள்ளிகளில் மிகப்பெரிய வீழ்ச்சி என தி ஓபன் டோர்ஸ் ரிப்போர்ட் 2021இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 2019-20 ஆம் ஆண்டில் 1.93 லட்சமாக இருந்த நிலையில், கடந்த கல்வியாண்டில் 1.67 லட்சமாக குறைந்துள்ளது. இதற்கு, தொற்றுநோய் பாதிப்பால் ஏற்பட்ட இடையூறு தான் காரணம் என அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம், சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் தான் 18.3 விழுக்காடு இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இப்பட்டியில் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு, சுமார் 34.7% இந்திய மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
2020-21 கல்வியாண்டில் இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் (34.8%) கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்பை தேர்ந்தெடுத்தனர். அடுத்ததாக , பொறியியல் படிப்பை 33.5% விழுக்காடு மாணவர்களும், இறுதியாக வணிகம் மற்றும் மேலாண்மை படிப்பை (11.7%) மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2020-21 இல் அமெரிக்காவிற்கு கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2019-20இல் 2.02 லட்சத்திலிருந்து 1.93 லட்சமாக குறைந்தது. 2014-15 ஆம் ஆண்டு முதலே, இந்திய மாணவர்கள் அதிகளவில் இருந்தாலும், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணமே இருந்தது.
தூதரக விவகாரங்களுக்கான அமைச்சர் டொனால்ட் ஹெஃப்லின் கூறுகையில், " தொற்றுநோய் பாதிப்பும், அதனை தொடர்ந்து அமலுக்கு வந்த ஊரடங்கும் பெரும் சவால்களாக இருந்தன. உயர்கல்விக்காக அமெரிக்காவிற்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோருக்குக் கவலையை எழுப்பியது. ஆனால், அதனை போக்கிட இரு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய மாணவர்களின் விருப்பமான இடமாக அமெரிக்கா
அதே சமயம், இந்தாண்டு கல்விக்காக இந்திய மாணவர்கள் வெளிநாடு வந்ததில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. மாணவர்கள் வருகை எண்ணிக்கை புதிய சாதனை படைத்துள்ளது.
தொற்றுநோய் மத்தியிலும் இந்திய மாணவர்கள் விசாவிற்கு அப்ளை செய்து அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய முடிந்தது. தற்போது மட்டும் 62,000 க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை வழங்கினோம். இது முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம். இது வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் விருப்பமான இடமாக அமெரிக்கா உள்ளது என்பதை காட்டுகிறது" என்றார்.
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை சரிவு இந்தியாவிலிருந்து வருபவர்களை மட்டும் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவிற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர் எண்ணிக்கையில் 15% சரிவை சந்தித்துள்ளது.
இந்த தி ஓபன் டோர்ஸ் அறிக்கையானது அமெரிக்கக் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான துறை மற்றும் சர்வதேச கல்வி நிறுவனம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil