மேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா? இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்!

 அவர்களுக்கு எந்த பிரச்சனையும் அங்கு இருக்காது.

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 5.4 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்திய மாணவர்களின் அமெரிக்க பயணம்:

மேற்படிப்பாக இருந்தாலும் சரி,  வெளிநாட்டில் வேலை என்றாலும் சரி மாணவர்களின் முதல் தேர்வு அமெரிக்கா தான்.  ஏன் சொல்லப்போனால்   மாப்பிள்ளை தேடலில் கூட  அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு சற்று மவுசு அதிகம் தான்.

அமெரிக்க பல்கலைக் கழகங்களில் சேர இந்திய மாணவர்கள் தொடர்ந்து அதிகளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்தாண்டு 1,86,000 ஆக இருந்த இந்திய மாணவர்கள் எண்ணிக்கை இந்தாண்டு 1,96,271 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே பயணித்து, மேற்படிப்பு படிப்போர் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதுத்தொடர்பான ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியானது.  இந்த அறிக்கையில் கடந்த ஐந்தாண்டாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுககு சென்று மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்ற நாட்டு மாணவர்களை ஒப்பிடும் போது இந்தியர்கள், அமெரிக்கா சென்று மேற்படிப்பு தொடர்வதில்  முதலிடத்தில் உள்ளனர் எனவும்   கூறப்பட்டுள்ளது.அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை மட்டும் 18 சதவீதம் ஆகும்.

இது கடந்தாண்டுகளை விட அதிகரித்து உள்ளது.  கடந்த சில ஆண்டாக சீன மாணவர்கள் முதலிடத்தில் இருந்தனர்.  ஆனால் தற்போது அவர்களை பின்னுக்கு தள்ளி இந்திய மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். அதே போல், அமெரிக்க மாணவர்கள் எண்ணிக்கையும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிகரித்து உள்ளது கூடுதல் தகவல்.

டெல்லியில், அமெரிக்க இந்திய கல்வி பவுண்டேஷன் சார்பில்  நடந்த கூட்டத்தில் தூதரக விவகாரத்துறை ஆலோசகர் ஜோசப் பேம்பர்  இந்த ஆய்வறிக்கையில்  கூறப்பட்டுள்ள தகவலை சுட்டிக்காட்டி  சிறப்பு உரையாற்றினார்.  இதுக் குறித்து அவர் பேசியதாவது, “ கடந்த பத்தாண்டுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்தால், இந்தியர்கள்,  அமெரிக்கா சென்று படிப்பது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதற்கு மிக முக்கிய காரணம், மிக உயர்ந்த தரமான  படிப்புகளை படிக்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விருப்பம் காட்டுகின்றனர். அதை தேடி தான் அவர்கள் செல்கின்றனர். அப்படிப்பட்ட கல்வியை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தந்து வருகின்றன.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில், இந்திய மாணவர்கள் விண்ணப்பிப்பது ஆண்டு தோறும் அதிகரித்தபடி தான் உள்ளது. இந்த எண்ணிக்கை சிறிதளவும் குறைந்ததில்லை. இந்திய மாணவர்களை வரவேற்பதில் அமெரிக்கா மகிழ்ச்சி அடைகிறது. அவர்களுக்கு எந்த பிரச்சனையும் அங்கு இருக்காது.  மாணவர்கள் விண்ணப்பிப்பது முறையாக பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும்”என்று  தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close