/indian-express-tamil/media/media_files/2025/03/12/EjLnh5hWd6E0HjfQ3Egz.jpg)
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. கல்வி உதவித்தொகையுடன் கூடிய இந்தப் பட்டயப் படிப்பை படிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பட்டயப் படிப்பினை ஆர்வத்தோடு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் 10 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 வீதம் உதவித் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2025-26ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் பட்டயப் படிப்பில் சேர குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதார்களுக்கு வயது வரம்பு கிடையாது. இப்பட்டயப் படிப்புக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.3200 (அடையாள அட்டை உள்பட) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டயப் படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் 4.15 மணி வரை வகுப்பு நடைபெறும்.
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தினை https://ulakaththamizh.in/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். இப்பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 07.04.2025 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு 11.04.2025 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கல்வி கட்டணம் செலுத்தியதிற்கான வங்கி வரைவோலையுடன் (Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து அனுப்ப விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டயப் படிப்பு சான்று வழங்குவதற்கான நிபந்தனைகள்
வருகைப்பதிவு 75% இருத்தல் வேண்டும். முறையான வருகைப்பதிவு இல்லாதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை. உதவித்தொகை பெறவும் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
ஆய்வேடு காலம்: 3 மாதம், இருப்பினும் ரூ. 1000/- தண்டத் தொகையுடன் அடுத்த 3 மாதத்திற்கு நீட்டிக்கப்படும். அதன் பின்னும் ஆய்வேடு சமர்ப்பிக்கப்படவில்லை எனில் பட்டயப் பதிவு நீக்கம் செய்யப்படும்.
மத்திய / மாநில அரசுகளின் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, இப்பட்டய வகுப்புக்காக வழங்கப்படும் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
2026 மார்ச் மாதம் இறுதித் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆய்வேடு சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே பட்டயச் சான்று வழங்கப்படும்.
இந்தப் படிப்பு குறித்து மேலும் விபரங்கள் அறிய இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 (தொலைபேசி-044-22542992, கைப்பேசி: 96000 21709) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.