இஸ்ரோ நடத்தும் சந்திரயான் 3 மகா வினாடி வினாப் போட்டி அக்டோபர் இறுதியில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ, MyGov உடன் இணைந்து, சந்திரயான்-3 இன் வெற்றிகரமான சாஃப்ட் லேண்டிங்கைக் கொண்டாட ஆன்லைன் வினாடி வினா போட்டியைத் தொடங்கியுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் isroquiz.mygov.in இல் பதிவுசெய்து, நமது நிலவு பயணம் தொடர்பான 10 கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். சந்திரயான்-3 மகா வினாடி வினா போட்டியின் பரிசுத் தொகை ரூ. 6,25,000, அதேநேரம் தரவரிசையில் இல்லாத அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய வினாடி வினா போட்டி அக்டோபர் 31 ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவுகள் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
பங்கேற்பது எப்படி?
முதலில் https://isroquiz.mygov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்துக் கொள்ளவும்.
'இப்போது பங்கேற்பு' என்பதை கிளிக் செய்யவும். MyGov கணக்கை உருவாக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
கோரப்பட்ட தொடர்புத் தகவலை உள்ளிடவும்.
ஓ.டி.பி.,யை உள்ளிட்ட பிறகு ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும். இப்போது வினாடி வினா தொடங்கும். போட்டியாளர்கள் 10 கேள்விகளுக்கு 300 வினாடிகளில் பதிலளிக்க வேண்டும். நெகட்டிவ் மார்க் கிடையாது.
முடிந்ததும், 24 மணி நேரத்திற்குள் வினாடி வினா சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய SMS/மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும்.
பரிசுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
சந்திரயான்-3 மகா வினாடி வினாவில் சிறப்பாகச் செயல்படுபவருக்கு ரூ. 1,00,000 (ஒரு லட்சம்), இரண்டாம் இடத்தைப் பிடிப்பவருக்கு ரூ. 75,000, மூன்றாம் இடத்தைப் பெறுபவருக்கு ரூ. 50,000 பரிசு வழங்கப்படும்.
அடுத்த சிறந்த 100 போட்டியாளர்கள் தலா ரூ.2000 ஆறுதல் பரிசுகளை வெல்வார்கள். அவர்களுக்குப் பிறகு முதல் 200 பேருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும்.
இது நேர அடிப்படையிலான வினாடி வினா என்பதால், ஒருவரின் தரவரிசை அவர்களின் தீர்க்கும் வேகம் மற்றும் துல்லியத்தைப் பொறுத்தது. அனைத்து 10 கேள்விகளும் மாற்றப்பட்டு, பெரிய, தானியங்கு கேள்வி வங்கியிலிருந்து கேள்விகள் எடுக்கப்படும்.
ஒவ்வொரு வினாடி வினா பங்கேற்பாளரின் செயல்திறனும் அவர்களது MyGov கணக்குடன் இணைக்கப்பட்டு தொடர்பு விவரங்கள் சமர்ப்பிக்கப்படும். பங்கேற்க ஒரே தகவலை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்த முடியாது. நகல் உள்ளீடுகள் ஏற்பட்டால், முதல் முயற்சியே கருத்தில் கொள்ளப்படும். டை-பிரேக்கர் எப்படி என்பதை MyGov இன் வழிகாட்டுதல்கள் தெளிவுபடுத்தவில்லை. மேலும் தகவலுக்கு, நீங்கள் சந்திரயான்-3 மகா வினாடி வினா இணையதளத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“