விண்வெளி ஆய்வில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் இஸ்ரோ: நாடு முழுவதும் 100 ஆய்வகங்கள்
ISRO to adopt 100 Atal Tinkering Labs across the country : இந்தக் கல்வி முறை பள்ளி நாட்கள் முதலே மாணவர்களிடையே ஆராய்ச்சி குறித்த எண்ணத்தை மேம்படுத்தும்
நாடு முழுவதும் விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருக்கிறது.
Advertisment
முதல் கட்டமாக 45 அடல் ஆய்வகங்களை இஸ்ரோ நிறுவனம் தற்போது தேர்ந்தெடுத்துள்ளது.
அடல் புதுமை இயக்கம், நிதி ஆயோக், இஸ்ரோ ஆகிய அமைப்புகள் இனைந்து ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன்," பாரம்பரிய கல்வி முறையோடு ஒப்பிடுகையில் இந்த புதிய முயற்சி பள்ளி குழந்தைகளிடையே செய்முறைக் கல்வியையும், புதுமையையும் ஊக்குவிக்க உதவியாக இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கல்வி முறை பள்ளி நாட்கள் முதலே மாணவர்களிடையே ஆராய்ச்சி குறித்த எண்ணத்தை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செயற்கைக்கோள்கள் ஏவுவதைக் காண பார்வையாளர்களாக வருகை தருமாறு அடல் ஆய்வகங்களுடன் தொடர்புள்ள மாணவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
நமது நாட்டின் சிறந்த மனிதர்களிடமிருந்து, இளம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், விண்வெளி வீரர்களும் பல்வேறு அரிய தகவல்களைக் கற்கவும், அவர்கள் சார்ந்துள்ள பள்ளிகள், குடும்பம் மற்றும் சமூகங்களுக்கு முன்மாதிரியாக விளங்கவும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ்குமார் கூறினார்
அடல் ஆய்வகம் என்றால் என்ன?
தொழில் முனைவையும், புதுமையையும் ஊக்குவிக்கும் வகையில் அடல் புதுமை இயக்கம், நிதி ஆயோக் ஆகியவை நாடு முழுவதும் 7000 ஆய்வகங்களை நிறுவி, அதன் வாயிலாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களிடையே பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவது, புதுமையான எண்ணங்களை புகுத்துவது போன்ற திறன்களை ஏற்படுத்தி வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil