சென்னையை தலைமை இடமாக கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho) செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு ஜோஹோ நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 1996-ம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஜோஹோ தற்போது அமெரிக்கா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை வாடிக்கையாளராக கொண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆண்டுதோறும் பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி வருகிறது. இளைஞர்கள் பலரும் இவரது நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஸ்ரீதர் வேம்பு இளைஞர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்.
அந்தவகையில், கிராமப்புற இளைஞர்களின் வளர்ச்சிக்கு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஜோஹோ பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்புகள் தொடர்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தென்காசி பகுதியில் பல இளைஞர்கள் பயன்பெற்று ஐடி துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். இதற்கு பயிற்சி அளித்தவர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “தென்காசி மாவட்டம், சுரண்டை நகரில் செயல்படும் ஜோஹோ பள்ளியின் தலைவர் கே.முருகேசன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் உள்ளூர் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றனர். இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 25 பேர் ஜோஹோவிலும், 15 பேர் மற்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இது அவர்களின் அற்புதமான செயல்.
முருகேசன், சாந்தி இருவரும் தங்கள் பகுதிகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பல வெற்றிக் கதைகளை உருவாக்கியுள்ளனர். ஜோஹோவின் நோக்கம் இவர்களைப் போன்று ஆர்வமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்கள் தங்கள் சமூகங்களுக்கு சேவை செய்வதாகும். இவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கிறார்கள்.
எங்கள் உள்ளூர் ஊழியர்களும் இவர்களுக்கு உதவியான உள்ளனர். ஜோஹோ இந்த முயற்சிக்கு நிதியுதவி அளிக்கிறது. பணத்தைவிட அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் தான் காரணம். அதுதான் முக்கியப் பொருள்” என்று ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/