Advertisment

‘வலதுசாரி'யை தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி பொறுப்பில் நியமிப்பதா? ஜவாஹிருல்லா அதிர்ச்சி

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி நியமனம்; வலதுசாரி ஆதரவாளரை நியமிப்பதா என ஜவாஹிருல்லா அதிர்ச்சி; நியமன உத்தரவு நிறுத்தி வைத்துள்ளதாக அரசு அறிவிப்பு

author-image
WebDesk
New Update
‘வலதுசாரி'யை தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி பொறுப்பில் நியமிப்பதா? ஜவாஹிருல்லா அதிர்ச்சி

Jawahirullah opposes Maniganda Boopathi as Kalvi TV CEO: கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு உடனே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

அரசு பள்ளி மாணவர்கள் வீட்டிலும் பாடங்களை கற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழக அரசால் தொடங்கப்பட்டது தான் கல்வி தொலைக்காட்சி. இதில் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை ஆசிரியர்கள் நடத்துவார்கள். இதில் எந்த வகுப்புகளுக்கு என்ன பாடம், எந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகும் என்ற விவரங்கள் பள்ளிகள் மூலமாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வகுப்பு மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சியைப் பார்த்து பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: பொறியியல் சேர்க்கை தரவரிசை வெளியீடு; 20-ம் தேதி முதல் கவுன்சலிங் என பொன்முடி அறிவிப்பு

இந்தக் கல்வித் தொலைக்காட்சி கொரோனா ஊரடங்கின்போது, மாணவர்கள் கற்றலைத் தொடர பெரிதும் உதவியது. தற்போது இதில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் ஒளிப்பரப்பபட்டு வருகிறது.

இந்தச் சூழலில் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சில தனியார் தொலைக்காட்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இந்தநிலையில், மணிகண்ட பூபதியின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மணிகண்ட பூபதியின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சி வழியே கல்வியை அளிப்பதற்குத் தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முதன்மை செயல் அலுவலராக (சி.இ.ஓ) மணிகண்ட பூபதி என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு நியமனம் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், வலதுசாரி சிந்தனை கொண்ட ஒருவரை மாணவர்களுக்குக் கல்வி அறிவூட்டும் தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவலராக நியமனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமூகநீதி மற்றும் சமத்துவத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தகுதிமிக்க ஆளுமைகள் தமிழகத்தில் உள்ளபோது, தொடர்ந்து சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராகக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரைக் கல்வித் தொலைக்காட்சிக்கு முக்கிய அதிகாரியாக நியமித்திருப்பது ஏற்புடையது அல்ல.

சமூக நீதியையும் சமூக நல்லிணக்கத்தையும் இலட்சியமாக கொண்டு செயல்படும் தி.மு.க அரசிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் ஒருவர் வளரும் தலைமுறையினர் உள்ளத்தில் திராவிட கொள்கைக்கு எதிரான மனப்பான்மையை ஏற்படுத்த கூடும்.

எனவே, தமிழக அரசு மணிகண்ட பூபதியின் நியமனத்தை ரத்து செய்து கல்வி மற்றும் ஊடகத்துறையில் தகுதியுள்ள வேறு ஒரு வல்லுநரை நியமனம் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, மணிகண்ட பூபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டெக்கில் பலரும் கருத்துக்களை பதிவிட்டும், அமைச்சர் பதவி விலக கோரியும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், மணிகண்ட பூபதியின் நியமன உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment