நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் புனேவை சேர்ந்த சிராக் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி-களில் சேர்வதற்கும், பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கும் நடத்தப்பட்ட இந்த தேர்வில், முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். முதல் 500 இடங்களில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த 140 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஜெய் முரேகர் எனும் மாணவர், மாநில அளவில் முதலிடம் பெற்றார். 293 மதிப்பெண்கள் எடுத்த இவர், தேசிய மட்டத்தில் 49-வது இடத்தையும் பிடித்தார். சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சேருவது தனது நீண்ட நாள் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
290 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 56வது இடத்தையும், மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், மாணவர் அஷ்வின் ராமச்சந்திரன் பெற்றார். ஐ.ஐ.டி மும்பை (அ) சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் கணித அறிவியல் துறையில் சேர விரும்புவதாக தெரிவித்தார்.
எந்த கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்/ எதற்கு விடையளிக்க கூடாது என்ற முடிவில் தான் தேர்வு வெற்றி அமையும் என்று தேசிய மட்டத்தில் 75வது இடம் பிடித்த (மாநில அளவில் 3வது இடம்) சி.ஆதித்யா தெரிவித்தார்.
தேசிய மட்டத்தில் கங்குலா புவன்ரெட்டி இரண்டாம் இடத்தையும், வைபவ் ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஜேஇஇ அட்வான்ஸ் நுழைவுத்தேர்வில் சாதித்த மாணவர்கள் அனைவரும், கடுமையான மாக் டெஸ்டுகளுக்கு தங்களை உற்படுத்திக் கொண்டுள்ளனர். சரியான திட்டமிடல், நேர்த்தியான அணுகுமுறை அவர்களின் வெற்றியை உறுதி செய்தது.
முன்னதாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த தேர்வில் வெற்றி பெறாமல் போன மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாகவும், தேர்வு ஒன்று தான் தங்கள் திறமைகளை வரையறுக்கும் முறை என்று கருதக்கூடாது என்றும் அவர் கூறினார்.